Saturday, January 31, 2009

ஐ.நா.வின் அறிவிப்பினையடுத்து இளையோரின் உண்ணாநிலை போராட்டம் இடைநிறுத்தம்

சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சுவிஸ் தமிழ் இளையோர் கடந்த புதன்கிழமை (28.01.09) தொடங்கிய உண்ணாநிலை போராட்டம் ஐ.நா. அலுவலகத்தினரின் சாதகமான அறிவிப்பினைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உடனடியாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும்
வன்னியில் உள்ள தமிழ் மக்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் அவர்கள் நேரடியாக உண்ணாநிலை போராட்டம் நடத்தும் தம்மைச் சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து நடத்தப்பட்டது.
ஆயிரத்துக்கும் அதிகமான சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஐ.நா. முன்பு அணிதிரண்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
நேற்று முன்நாள் வியாழக்கிழமை மாலை தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவினை ஐ.நா. மன்றத்திடம் கையளித்த இளையோர் ஐ.நா. சபை முடிவுக்காக ஆயிரக்கணக்கான மக்களுடன் நேற்று மாலை காத்திருந்தனர்.
இளையோரின் வேண்டுகோளுக்கான சாதகமான பதிலை எதிர்வரும் வியாழக்கிழமை (05.02.09) தாம் அளிப்பதாகவும், அதன் அடிப்படையில் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்துமாறும் மாலை 7:30 நிமிடமளவில் ஐ.நா. அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர்.
மாலை 8:00 மணியளவில் உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்திய இளையோர் வியாழக்கிழமை தமக்குச் சாதகமான பதில் வராத பட்சத்தில் நீராகாரம் இன்றித் தாம் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக கூடி நின்ற மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ளும் இளையோருக்கு ஆதரவு அளிக்க ஐ.நா. சபையை நோக்கி அணிதிரண்ட சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் துண்டுப்பிரசுரங்களை சுவிஸ் மக்களுக்கு விநியோகித்தனர்.
அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்களில் ஜெனீவா ஐ.நா. முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் அதேவேளை, சிறிலங்கா அரசின் தேசிய நாளான பெப்ரவரி 4 இல் ஐ.நா. சபை முன்றலில் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.
இந்த ஒன்றுகூடலில் அனைத்து தமிழ் மக்களையும் இந்நாள் தமிழர்களின் கரிநாள் என்று உலகுக்குப் பறைசாற்ற அணிதிரளுமாறும் சுவிஸ் தமிழ் இளையோர் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன், எதிர்வரும் வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் அதேவேளை, ஐ.நா. சபையினால் சாதகமான பதில் வராத பட்சத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தண்ணீர் அருந்தாது போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக இளையோர் தெரிவித்துள்ளனர்.
முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மூலம் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்ட அனைவரையும் அணிதிரளுமாறு இளையோர் வேண்டுகோள் விடுத்தனர்.

நாகேஷ் காலமானார்

அடுத்தடுத்த தலைமுறைகளும் போற்றக் கூடிய நகைச்சுவை பல்கலைக்கழகமாக விளங்கிய நகைச்சுவை பேரரசர் நாகேஷ் காலமாகிவிட்டார். அவருக்கு வயது 75. ராஜேஷ் பாபு, ரமேஷ் பாபு, ஆனந்த பாபு ஆகிய மூன்று மகன்களும் 3 பேரன்கள், 2 பேத்திகளும் உள்ளனர். ஒல்லியான நாகேஷின் இயற்பெயர் 'குண்டு'ராவ்!
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கீழே விழுந்ததில் காலில் பலத்த அடிபட்டிருந்ததாம் நாகேஷ§க்கு. அன்றிலிருந்து வீட்டிலேயே இருந்தவர், நேற்று குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினாராம். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் காலமானார்.
ஆரம்ப காலங்களில் பாலசந்தர் நாடகங்களில் நடிக்கத் துவங்கியவர், பின்பு நவகிரகம் படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார். சர்வர் சுந்தரம் (1964) படத்தில் நடித்து புகழ் ஏணியில் ஏற ஆரம்பித்தார். இவர் நடித்த கடைசி படம் தசாவதாரம். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், நாகேஷின் திருவிளையாடல் தருமி வேடம் மக்களால் மறக்கவே முடியாதது.
நாகேஷின் மறைவை அறிந்த ரஜினி, கமல் இருவரும் அவரது வீட்டிற்கு உடனே விரைந்தனர். பத்மஸ்ரீ விருது பெற்ற விவேக் நாகேஷ் பற்றி கூறும்போது நா தழுதழுக்க பேசினார். 'சிலரால் சில மாதிரிதான் காமெடியாக நடிக்க முடியும். ஆனால் அவர் ஆல் ரவுண்டர். பத்ம ஸ்ரீ விருதுக்காக சந்தோஷப்படுவதா? நாகேஷ் மறைந்தார் என்பதை நினைத்து அழுவதா? தவிக்கிறேன்' என்றார் விவேக்.
தமிழ் சினிமாவின் இழப்பு காலம் இது. சிறிது நாட்களுக்கு முன்புதான் நம்பியாரை இழந்தோம். இப்போது நாகேஷ். இளைஞர்களின் புத்துணர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்த நாகேஷை இழந்து கண்ணீர் வடிக்கிறோம் என்றார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார்.

இலங்கைத் தமிழ் மண்ணில் அமைதி வேண்டி பட்டத்தை வாங்க மறுத்த தேனி மாணவர்

இலங்கைத் தமிழ் மண்ணில் தமிழர்கள் படுகொலை செய்வதை தடுக்க வேண்டியும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்பால்பூபதி நெல்லையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டத்தை வாங்க மறுத்தார்.
ஈழத்தில் நடைபெற்றுவரும் தொடர்போரினால் ஆயிரக்கனக்கான தமிழ் மக்கள் மடிந்து வருகின்றனர். இதை உலகத் தமிழர்கள் அனைவரும் கண்டித்துவரும் வேளையில் மத்திய மாநில
அரசுகள் கண்டுகொள்ளாததன் காரணமாக பொதுமக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் பலமாதங்களாக போராட்டம் நடத்தியும் எந்த ஒரு அமைதி முடிவும் ஏற்படவில்லை.
தற்போது தமிழகம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகள் உண்ணாநிலை மற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். ஈழத் தமிழர் விசயத்தில் படுகொலையை கண்டித்து கடந்த 30.01.2009 அன்று தூத்துக்குடி கொள்கை நல்லூரைச் சேர்ந்த இளைஞர் முத்துக்குமரன் சென்னை சாஸ்திரிபவன் அருகே உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழர் படுகொலைக்காக மாணவ, மாணவிகள் பல்வேறு வகையான போராட்டங்களை ஈடுபட்டு வரும் வேளையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராமையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆரோக்கியசாமி என்பவரது மகன் ஜான்பால்பூபதி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து அதற்காக நேற்று நெல்லை பாளை சேவியர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழக துணைவேந்தர் சபாபதி மோகனிடம் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தான்படித்த பட்டத்தை வாங்க மறுத்தார்.
இதுகுறித்து துணைவேந்தர் சபாபதி மோகன் மாணவர் ஜான்பால்பூபதியிடம் எதனால் பட்டத்தை வாங்க மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் தினந்தோறும் மாண்டுவருகிறார்கள். அதனால் பட்டம் பெற விருப்பமில்லை என்று தெரிவித்தார். இலங்கையில் இரண்டு அரசுகளின் சார்பில் சமாதானம் ஏற்பட்டபின் பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பட்டம் வாங்க மறுத்த ஜான்பால்பூபதி தனது தந்தை கூலி வேலை செய்து என்னைக் கஷ்டபட்டு படிக்க வைத்து எனது குடும்பத்தில் முதல் பட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது, என்று என்று கூறியது மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் மிகப்பெரிய தமிழ் உணர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Friday, January 30, 2009

வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு விடுதலைப் புலிகள் வீரவணக்கம்

ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ மக்கள் சார்பிலும், எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு.
அன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழீழ மக்களுக்கான ஏழு கோடி தமிழக உடன்பிறப்புக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி நிற்கின்றன. உங்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு உலகத் தமிழினத்தின் வரலாற்றில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.
எமது மக்கள் சிங்கள அரசின் கொடுமையான இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ்வேளையில் உங்களின் எழுச்சி கண்டு மன ஆறுதலும் உற்சாகமும் அடைகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்துக்குமாரின் பாட்டி கதறல்

திருமணத்திற்கு பெண் பார்த்து வைத்திருந்தேன்.. அதற்குள் என் பேரன் போய் விட்டானே என்று இலங்கை தமிழருக்காக தீக்குளித்து உயிர்விட்ட பத்திரிக்கை ஊழியர் முத்துக்குமாரின் பாட்டி கண்ணீர் விட்டபடி கூறினார்.இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம், நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும், இலங்கை தமிழர்களை காப்பாற்ற கோரியும் சென்னையில் நேற்று வாலிபர் முத்துகுமார் தீக்குளித்து உயிர் விட்டார்.இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்துர் அருகேயுள்ள கொழுவைநல்லூர் கிராமம் ஆகும். தந்தை பெயர் குமரேசன் என்ற மகாராசன். முத்துகுமாரின் தாய் சித்திரை கனி இறந்துவிட்டார். முத்துகுமாரின் தம்பி வசந்த்குமார் விபத்தில் பலியாகிவிட்டார். சகோதரி தமிழரசிக்கு திருமணம் ஆகிவிட்டது. முத்துகுமாரின் பெற்றொர் 15 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினர்.முத்துகுமாரின் பாட்டி லிங்கபுஷ்பம் அம்மாள் மட்டும் சொந்த ஊரான கொழுவை நல்லூரில் வசித்து வருகிறார்.முத்துக்குமாரின் தியாகம் குறித்து அவர் கண்ணீர் விட்டபடி அவர் கூறுகையில், என் பேரன் முத்துகுமார் படிப்பில் கெட்டிக்காரன். அவர் மரந்தலை உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்தான். படிப்பில் சிறந்து விளங்கியதற்கு பரிசுகள் வாங்கியுள்ளான்.என் பேரனுக்கு திருமணம் நடத்துவதற்கு பெண் பார்த்து வந்தேன். அதற்குள் எங்களை விட்டு போய் விட்டானே என்று கதறி அழுதார்.முத்துக்குமாரின் சொந்த கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.அங்கு முத்துக்குமாரின் படத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு ஊர்களிலும் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.இன்று மாலை முத்துக்குமாரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
தலைவர்கள் அஞ்சலிமுத்துக்குமார் மரணச் செய்தி கேட்டதும் விரைந்து சென்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழ் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இலங்கை எம்.பி.சிவாஜி லிங்கம், நடிகர் டி.ராஜேந்தர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட ஏராளமானவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.தே.மு.தி.க. சார்பில் இளைஞரணித் தலைவர் சுதீஷ் அஞ்சலி செலுத்தினார்முத்துக்குமார் உடலுக்கு அனைத்துத் தரப்பினரும் அஞ்சலி செலுத்துவதற்காக வசதியாக கொளத்தூர் வியாபாரிகள் சங்க கட்டிடம் முன்பு பெரிய மேடை அமைக்கப்பட்டது.நேற்றிரவு அந்த மேடைக்கு முத்துக்குமார் ஊர்வலமாக உடல் எடுத்து வரப்பட்டு குளிர் சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.இன்று காலை முதல் பெரும் திரளானவர்கள் முத்துக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து முத்துக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
செங்கல்பட்டில் 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கவனத்தை ஈர்த்த மாணவர்களும், கொளத்தூர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்தியவர்களில் 90 சதவீதம் பேர் இளைஞர்கள்தான்.

Monday, January 5, 2009

புஷ்ஷுக்கு சப்பாத்தால் அடித்தால் பாதி விலை குறைப்பு !

குறிப்பிட்ட இலக்கை குறி பார்த்து சப்பாத்தை எறிந்தால், அந்த ஜோடி சப்பாத்தை பாதி விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். சீனாவில் கலக்கும் இந்த விசித்திர தள்ளுபடி விற்பனையில், குறியாக நிறுத்தப்பட்டு உள்ளது ஜார்ஜ் புஷ் படம்!சமீபத்தில் தனது பதவிக் காலத்தில் கடைசி பயணமாக ஈராக்குக்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ் வந்தாலும் வந்தார். அவருக்கும்(!) அவரையும், அமெரிக்காவையும் பிடிக்காதவர்களுக்கும் அந்தப் பயணம் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.ஈராக் பிரதமருடன் சேர்ந்து புஷ் பேட்டி அளித்தபோது, டிவி நிருபர் ஒருவர் தனது இரண்டு சப்பாத்துக்களையும் அடுத்தடுத்து புஷ் நோக்கி எறிந்த காட்சியை உலகமே பார்த்தது.அந்த தாக்குதலில் இருந்து அடிபடாமல் புஷ் தப்பினாலும் அவரது பெயரும், அந்த பிராண்ட் சப்பாத்தின் பெயரும் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கிறது.இப்போது சீனாவில் அந்த சப்பாத்துக்கு விசேஷ தள்ளுபடி அளிக்கப்படுகிறது அதுவும் எப்படி... புஷ் போஸ்டர் உயரத்தில் ஏ முதல் டி வரை குறிக்கப்பட்டிருக்கும். தூரத்தில் இருந்து குறி பார்த்து சப்பாத்தை எறிய வேண்டும்.சப்பாத்து படும் இடத்தைப் பொருத்து 20 முதல் 50 சதவீதம் வரை விலையில் தள்ளுபடி கிடைக்கும். இந்த அறிவிப்பை பெய்ஜிங்கில் உள்ள ஒரு காலணி கடை அறிவித்ததுதான் தாமதம், கூட்டம் அலைமோதியது. முதல் அரை மணி நேரத்துக்குள் 64 ஜோடி சப்பாத்து விற்றுத் தீர்ந்து ரூ.75,000 கலெக்ஷன் ஆனது. அடுத்த நாள் பல நூறாக விற்பனை பெருகியது.இதுபற்றி கடை முதலாளி கூறுகையில், ஈராக்கில் நடந்த சப்பாத்து எறியப்பட்ட சம்பவம் எங்களைக் கவர்ந்தது. வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கு அளிக்க தள்ளுபடி போட்டியை நடத்துகிறோம்.அதற்கு 'உலகப் புகழை நோக்கி எறிந்து, அதிர்ஷ்டம் வெல்லுங்கள்' என்று பெயரிட்டுள்ளோம் என்றார்.

Sunday, January 4, 2009

2008-படங்கள்: ஒரு ப்ளாஷ்பேக்!

இங்கே நாம் போட்டிருக்கும் பட்டியல் கடந்த ஆண்டின் மறக்க முடியாத வெற்றி, தோல்வி மற்றும் ஏமாற்றங்களைத் தந்த 10 படங்கள்...
1.தசாவதாரம்
கே.எஸ். ரவிக்குமார்தான் இயக்குநர் என்றாலும், தசாவதாரம் ஒரு கமல் படம் என்பது படம் முழுக்கத் தெரிந்தது. திரைமுழுக்க கமல் ஆக்கிரமிப்புதான். அறிவுஜீவி கமல் காணாமல் போய், மாஸ் ஹீரோ கமல் வெளிப்பட்டிருந்ததில் அவரது ரசிகர்களுக்கே கூட ஏக சந்தோஷம்.
கமலும் வெற்றிக்கான பாராமுலாவை தெளிவாகத் தெரிந்து கொள்ள இந்தப் படம் உதவியது. பலவித விமர்சனங்கள் இருந்தாலும், 2008ம் ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படம் தசாவதாரம் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாடுகளில் கடந்த ஆண்டு அதிக வசூலைப் பெற்ற படங்களில் முதலிடமும் தசாவதாரத்துக்கே. தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தனது பேனரை இழந்தாலும், அவரது பேங்க் பேலன்ஸை இழக்காமல் காப்பாற்றிவிட்டார் கமல்.

2.குசேலன்
சென்ற ஆண்டு எல்லாருக்குமே அதிர்ச்சி தந்தது குசேலன் படத்தின் தோல்வி. இந்தப் படத்தின் நாயகன் ரஜினிகாந்த் இல்லை என்பதை மறைத்ததோடு, ரஜினி சொன்னதையும் மீறி படத்தை அநியாய விலைக்கு விற்றார்கள் தயாரிப்பாளர்களான கவிதாலயாவும் செவன் ஆர்ட்ஸூம்.
அத்தோடு ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக எழுந்த வதந்தி, பின்னர் அவர் 'மன்னிப்புக் கேட்கவில்லை, வருத்தம்தான் தெரிவித்தேன்' என்று சொன்னதைக் கூட எடுபடாமல் செய்துவிட்டது.
அதைவிட முக்கியம், இந்தப் படத்தை சென்னையில் மட்டும் 20 திரையரங்குகளில் திரையிட்டது. 'குறைந்த லாபம் வைத்து விற்றுக் கொள்ளுங்கள், சென்னையில் 5 தியேட்டர்களில் மட்டும் வெலியிடுங்கள்' என ரஜினி சொன்னதைக் கூட புறந்தள்ளிவிட்ட இவர்கள் பேராசைக்குக் கிடைத்த சவுக்கடியாக அமைந்தது குசேலன் தோல்வி.
3.சுப்பிரமணியபுரம்
சின்ன பட்ஜெட், எளிய கதை மாந்தர்கள், நாம் எப்போதோ பக்கத்திலிருந்து பார்த்த சம்பவங்களையே திரைக்கதையாக்கிய விதம்... இதுதான் சுப்பிரமணியபுரத்தின் மாபெரும் வெற்றிக்கான காரணங்கள்.
சொல்லப்போனால் இந்தப் படத்தைத்தான் கடந்த ஆண்டின் மிகச் சிறந்த வெற்றிப் படமாக குறிப்பிட வேண்டும். இந்தப் படம் மூலம் வினியோகஸ்தர்களுக்குக் கிடைத்த லாபம் கிட்டத்தட்ட 400 சதவிகிதம்!!
இந்தப் படம் மூலம் கவனிக்கப்படும் படைப்பாளிகளுள் ஒருவராக, மணிரத்னம் போன்றவர்கள் தேடி வந்து பாராட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டார் இயக்குனர் சசி. நேர்மையான உழைப்புக்குக் கிடைத்த மரியாதை அது.
4. ஏகன்
ஐங்கரன் பேனரில் வந்த முதல்படம். கலகலப்பான படமாக இருந்தாலும், அஜீத் ரசிகர்களுக்கே பிடிக்காத படமாகிவிட்டது ஏகன். ஒருவேளை படத்தில் தன்னைப் பற்றிய விமர்சனங்களை தானே அஜீத் சொல்வதுபோல வரும் காட்சிகள் பிடிக்கவில்லை போலிருக்கிறது.
ஏற்கெனவே சில படங்களின் விநியோகத்தில் ஏற்பட்ட நஷ்டத்துடன், ஏகன் படத்தில்பட்ட அடியும் சேர்ந்து அவர்களை எழமுடியாத அளவுக்குச் செய்துவிட, இப்போது மீண்டும் துவங்கிய இடத்தில் போய் நிற்கிறது ஐங்கரன்!
5. குருவி
இந்தப் படம் ஒரு வெற்றிப் படம் என விஜய் தரப்பு கூறிக் கொண்டாலும், ரசிகர்களின் நம்பிக்கைக்கு கிடைத்த அடி என்று சொல்வதே சாலப் பொருந்தும்.
கில்லி என்ற நல்ல கமர்ஷியல் பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்த தரணியும், இளைஞர்களின் நம்பிக்கை நாயகர்களின் ஒருவரான விஜய்யும் கொஞ்சமும் லாஜிக் இல்லாத இப்படியொரு படத்தைக் கொடுப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
6. அஞ்சாதே
தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களுள் ஒன்று அஞ்சாதே. சிறந்த திரைக்கதை மற்றும் மிகைப்படுத்தல் இல்லாத இயக்கத்துக்கு சிறந்த உதாரணம் அஞ்சாதே.
மிஷ்கின் என்ற படைப்பாளிக்குள் இன்னும் பல வண்ணங்கள் புதைந்து கிடப்பதையும், நல்ல ரசிப்புத் தன்மை எனும் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அந்த வண்ணங்கள் தமிழ் சினிமாவையே கலர்புல்லாக்கும் என்ற நம்பிக்கையையும் விதைத்த நல்ல படம். தரத்தில் மட்டுமல்ல... வணிக ரீதியாகவும் இந்தப் படம் பெற்ற வெற்றி தமிழ் ரசிகர்களின் நல்ல ரசனைக்கு சான்று.
7. காதலில் விழுந்தேன்
நல்ல படமாக இருக்கும்... ஆனால் போதிய விளம்பரம் இல்லாமல் துவண்டு போய் தோல்விப் பட்டியலில் சேர்ந்துவிடும். தமிழ் சினிமாவில் இன்று நேற்றல்ல... ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் முக்கிய குறைபாடு இது.
சரியான நேரத்தில் சன் பிக்சர்ஸ் அந்தக் குறையைக் களைய முன்வந்தது. அந்த முயற்சியின் விளைவுதான், தயாராகி பல மாதங்கள் பெட்டியில் தூங்கிக் கிடந்த காதலில் விழுந்தேனை வாங்கி திரையிட வைத்தது. மார்க்கெட் உள்ள நடிகர்களோ இயக்குநரோ இந்தப் படத்தில் இல்லைதான். ஆனால் நினைத்தால் ஒரு மார்க்கெட்டையே உருவாக்கும் ஆற்றல் படைத்த சன் நிறுவனத்தின் கைக்குப் போன பிறகு, காதலில் விழுந்தேன், ஒரு சூப்பர் ஸ்டார் பட ரேஞ்சுக்கு பேசப்பட்டது. தமிழ் சினிமாவின் கடந்த ஆண்டு சாதனைகளுள் ஒன்று இந்தப் படம் பெற்ற வெற்றி.
8. அபியும் நானும்
சில மிகைப்படுத்தல் இருந்தாலும், அபியும் நானும் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத, மறுக்க முடியாத நல்ல திரை முயற்சி.
நல்ல சினிமா வரவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதில் என்ன லாபம்? பிரகாஷ் ராஜ் மாதிரி துணிந்து சில நல்ல முயற்சிகளைச் செய்து பார்த்தால்தானே, ரசனையின் அளவுகோலைத் தெரிந்து கொள்ள முடியும். இந்தப் படம் சி சென்டர்களில் இப்போதைக்கு எடுபடாமல் கூடப் போகலாம்.
ஆனால் இளைஞர்கள், சக கலைஞர்களுக்கே கூட, இந்த மாதிரி நல்ல முயற்சியில் நாமும் இறங்கலாமே என்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது நிஜம்.
9.சந்தோஷ் சுப்பிரமணியன்
'ஃபீல் குட்', 'க்ளீன் எண்டர்டெய்ன்மென்ட்' போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் படம். அருமையான படைப்பு. வணிக ரீதியாகவும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களைத் திருப்திப்படுத்திய படம் இது. எந்த வித தூண்டுதலும் இல்லாமலேயே தியேட்டர்காரர்கள் சந்தோஷமாக 100 நாட்கள் ஓட்டிய வெகு அரிதான படங்களில் ஒன்று. ஜெயம் ரவி என்ற இளைஞரால் எந்த மாதிரி வேடங்களையும் அநாயாசமாக செய்ய முடியும் என நிரூபித்த படம் இது.
10. பூ
ஒரு தமிழ் நாவலின் அழகு கொஞ்சமும் கெடாமல் ஒரு திரைப்படத்தைத் தர முடியும் என இந்தப் படத்திலும் நிரூபித்திருந்தார் சசி. பார்வதி என்ற நல்ல நடிகையை இந்தப் படம் மூலம் தந்தார். வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தமிழ் சினிமாவின் தரத்தை இன்னும் ஒரு எட்டு முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாகவே இந்தப் படத்தை நாம் பார்க்கிறோம்.
இன்னும் கூட சில நல்ல படங்கள் இந்த ஆண்டில் வெளியாகின. சத்யம் போன்ற பெரும் ஏமாற்றங்களும் இந்த ஆண்டில் கிடைத்தன. இந்த வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் தொழில் நேர்மை, அக்கறையின்மை அல்லது அலட்சியம்தான். இந்தப் பாடிப்பினைதான் நம் படைப்பாளிகள் கற்றுக் கொள்ள வேண்டியது!