Sunday, October 26, 2008

கருணாநிதி இராஜினாமா வாபஸ்

இலங்கை அதிபரின் தூதர் புதுடெல்லியில் சந்தித்து பேசியதை தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார். இதனைத் தொடர்ந்து திமுக எம்.பி.க்களின் இருவார கால ராஜினாமா நாடகம் முடிவுக்கு வருகிறது.
இலங்கையில் கிளிநொச்சி பகுதியில் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் ஏராளமாக கொல்லப்படுகின்றனர். ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து காடுகளில் தங்கியிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் இந்த நிலையை கண்டித்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த 14ந் தேதி தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்றும், தமிழர்கள் பாதிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு இலங்கை பிரச்சனையில் தலையிட்டு, இரண்டு வார காலத்தில் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்வது என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பின்தேதியிட்டு தங்கள் இராஜினாமா கடிதங்களை கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியிடம் அளித்தனர். இதற்கிடையே, பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதியை தொடர்பு கொண்டு இலங்கை பிரச்சனையில் தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என அந்நாட்டு அரசுக்கு அறிவுறுத்தப்படும் என உறுதி அளித்திருந்தார். இதன்படி, கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்ட இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் தமிழர்கள் சிறிது அளவு கூட பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இலங்கை அரசிடம் கூடுதல் விவரங்களை இந்திய அரசு அப்போது கேட்டது. இதைத் தொடர்ந்து, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு உணவு, உடை, மருந்து பொருட்கள் அனுப்ப தடைவிதித்திருந்த இலங்கை அரசு, ஐநா சபையின் நிவாரண பொருட்களை கொண்டு சென்ற கப்பல்களுக்கு தடையை நீக்கியது. இதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்களும், மருந்து, உடை உள்ளிட்ட நிவாரண உதவிகளும் வினியோகிக்கப்பட்டன. இலங்கை நிலவரம் தொடர்பாக இந்திய அரசுக்கு விளக்கம் அளிப்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே தனது சகோதரரும், சிறப்பு பாதுகாப்பு ஆலோசகருமான பசில் ராஜபக்சேயை புதுடெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார். புதுடெல்லி வந்துள்ள பசில் ராஜபக்சே, அங்கு வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, அதிபர் ராஜபக்சே எழுதியுள்ள கடிதத்தை அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என அவர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு வழங்கும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை ஏற்றுக் கொள்ளவும் அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சண்டையால் இடம்பெயர்ந்த இரண்டரை இலட்சம் அகதிகளுக்கு, இருப்பிட வசதி செய்து கொடுக்க இலங்கை அரசு இசைவு தெரிவித்து உள்ளது என்றும், தமிழர்களின் நலனை பாதுகாக்க வாக்குறுதி அளித்துள்ளது என்றும், இந்த விவரங்களை பசில் ராஜபக்சே இந்திய அரசிடம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. பிரணாப் முகர்ஜியுடன் நடத்திய பேச்சுக்களுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பசில் ராஜபக்சே, இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசு முன்னுரிமை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக கூட்டு அறிக்கை ஒன்று இன்று மாலை வெளியிடப்படும் என்றும், இது குறித்து மேலும் ஒரு சுற்று பேச்சு நடைபெறும் என்றும் அவர் கூறினார். முன்னதாக இலங்கை அதிபரின் தூதர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்து பேச்சுக்கள் நடத்தினார். இலங்கை தூதர் தன்னுடன் நடத்திய பேச்சுக்களின் விவரங்களை எடுத்துக் கூறுவதற்காக பிரணாப் முகர்ஜி இன்று மாலை சென்னைக்கு வருகிறார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் இன்று மாலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். இன்று மாலை 5 மணியளவில் மத்திய அமைச்சரும், தமிழக முதல்வரும் சந்திக்க இருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பையடுத்து, இலங்கை தமிழர் பாதுகாப்புக்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறி திமுக தனது எம்.பி.க்களின் இராஜினாமாவை விலக்கிக் கொள்ளும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முதல்வருடன் சோனியா பேச்சு இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கருணாநிதியிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கி உள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டு தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இன்று பகல் 12 மணியளவில் முதலமைச்சர் கருணாநிதியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது இலங்கை பிரச்சனை குறித்தும் தற்போதுள்ள சூழ்நிலைகள் குறித்தும் மத்திய அரசு எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சரிடம் கூறியதோடு, இன்று பிற்பகலில் மேலும் அது பற்றி விரிவாக பேசுவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அனுப்பவிருப்பதாகவும் தெரிவித்தார். சோனியாவுக்கும்,பிரதமருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், இலங்கை பிரச்சனையில் இந்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்காக தமிழ் மக்களின் சார்பில் தனது நன்றியை முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சோனியா-முகர்ஜியுடன் பாலு சந்திப்பு:முன்னதாக இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.வரும் 28ம் தேதிக்குள் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.இலங்கை குழுவிடம் முகர்ஜி பேச வேண்டிய விஷயங்கள் என்று கூறி முதல்வர் கருணாநிதி தெரிவித்த யோசனைகளையும் பாலு முன் வைத்ததாகத் தெரிகிறது.மேலும் இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தன்னிச்சையாக கருத்து தெரிவித்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் சோனியாவிடம் பாலு கோரியதாகத் தெரிகிறது.பின்னர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்த பாலு, இலங்கை விஷயத்தில் மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

0 comments: