Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது? உலகெங்கும் மோசடிகள், பொருளாதார நெருக்கடி ஒரு புறம், அதீத அறிவியல் வளர்ச்சியின் விளைவுகளின் காரணமாய் சமூகச் சீர்கேடுகள் இங்குமங்குமாய்... இந்தச் சூழலில் புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா?

தேவைதான்! விழாக்கள் பண்டிகைகள் மற்றும் வாழ்த்துகள் கூறுவது, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொள்வதற்கும், நம்பிக்கை பெற்றுப் புத்துணர்வு பெறுவதற்கும்தானே? ஆகவே புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறுங்கள். களிப்புக் கொள்ளுங்கள். இவற்றால் நம்பிக்கையும் புத்துணர்வும் கொண்டு, மேற்கூறும் சவால்களை வெல்லுங்கள். புத்தாண்டு கொண்டாடுவதால் எந்தவொரு சிரமும் அடுத்தவர்க்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புத்துணர்வோடு 2009ஐ எதிர்கொள்வோம் வாருங்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Monday, December 29, 2008

குறைந்தது 6 மணி நேரங்கள் நித்திரை செய்கிறீர்களா, இல்லை என்றால் இதை வாசியுங்கள்.

ஒரு வளர்ந்த மனிதன் குறைந்தது 6 மணித்தியாலங்கள் (குழந்தைகள் சிறுவர்கள் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள்) தினமும் நித்திரை செய்ய வேண்டுமாம். அதற்குக் குறைவாக நித்திரை கொள்பவர்களில் அவர்களின் நாடிகள் தடிப்படைந்து பின்னர் குருதிச் சுற்றோட்டம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

போதிய நித்திரையின்றி வாழ்பவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் 3 இல் ஒருவருக்கு நாடி தடிப்படையும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. இதே போதிய நித்திரை செய்பவர்களில் 10 இல் ஒருவருக்கே அவதானிக்கப்பட்டுள்ளது.

போதிய அளவு நித்திரை இன்மைக்கு மன அழுத்தமும் அதனால் சுரக்கப்படும் cortisol எனும் ஓமோனும் நித்திரையின் அளவைக் குறைத்து நாடிகளில் கல்சியம் படிவதை அதிகரித்து நாடியை தடிப்படையச் செய்வதாக சொல்லப்படுகிறது.

எதுஎப்படி இருப்பினும் இவ்வாய்வை மட்டும் வைத்துக் கொண்டு நாடிகளில், இதயத்தில் ஏற்படும் நீண்ட காலப் பாதிப்புக்களுக்கு விளங்கம் தரமுடியாத விட்டாலும் போதிய நித்திரை என்பது குருதிச் சுற்றோட்டம் மற்றும் இதயத்தொழிற்பாட்டை சீராக்க உதவுகின்றன என்பதை ஆணித்தரமாகக் கூற முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனவே வேலை வேலை என்று தூக்கத்தை தொலைக்காது இரவில் போதியளவு (குறைந்தது 6) மணித்தியாலங்கள் தூங்குவதை வழங்கப்படுத்திக் கொள்வது நன்று.

குறிப்பாக பின்னரவு வரை மது அருந்திவிட்டு பின்னர் காலையில் விழித்தெழுபவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, December 28, 2008

உங்களுக்கும் ஜனாதிபதி புஷ் மீது காலணியை வீசுவதற்கு வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஈராக்கிய விஜயத்தின் போது அவர் மீது ஊடகவியலாளர் ஒருவர் காலணிகளை வீசித் தாக்கிய பரபரப்பு ஓயும் முன்பே அச்சம்பவத்தை கருப் பொருளாகக் கொண்டு இணையத்தள விளையாட்டுகள் பல உருவாக்கப்பட்டுள்ளன.

உங்களால் புஷ் மீது காலணியொன்றை வீச முடியுமா? என்ற தலைப்பில் புஷ் விளையாட்டு ஒன்று http://www.kroma.no/2008/bushgame/ என்ற இணையத்தள முகவரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இணையத்தள விளையாட்டை விளையாடும் ஒருவர் அதிக தடவைகள் புஷ் மீது காலணியை சரியாக இலக்கு வைத்து வீசினால் சட்டென கணினித்திரையில் "ஆம், உங்களால் முடியும்' என்ற வார்த்தை பளிச்சிடுகிறது. அதேசமயம் www.sockadawe.com என்ற இணையத்தள முகவரியிலும் புஷ் மீது காலணியை குறிபார்த்து வீசும் விளையாட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்படி விளையாட்டில் பங்கேற்றவர்களில் 1.4 மில்லியன் பேர் புஷ்ஷை சரியாக இலக்கு வைத்து காலணியால் அடித்ததாக மேற்படி இணையத்தளம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் இணையத்தள விளையாட்டை உருவாக்கிய பிரித்தானியாவைச் சேர்ந்த அலெக்ஸ் தியூ இந்த விளையாட்டில் புஷ்ஷை காலணியால் அடிக்க 30 செக்கன் கால அவகாசம் வழங்கப்படுவதாக கூறினார்.

ஒரு வயது குழந்தையை அரவணைத்து பராமரித்த பூனைகள்

ஒரு வயதுடைய ஆண் குழந்தையொன்று பூனைகளால் பராமரிக்கப்பட்டு வந்த விசித்திர சம்பவம் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்றுள்ளது.

பெண் பொலிஸ் உத்தியோகத்தரான அலிசியா லோரெனா லின்ட்விஸ்ட், கிரிஸ்ட்கிங் மாவட்டத்திலுள்ள கால்வாய் ஒன்றில் பூனைகளால் குழந்தையொன்று பராமரிக்கப்பட்டு வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட விசித்திர அனுபவம் குறித்து அலிசியா விபரிக்கையில், "நான் நடந்து சென்ற போது, பூனைக் கூட்டமொன்று மிகவும் நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். வழமைக்கு மாறான அந்த நிகழ்ச்சி என் கவனத்தைக் கவர பூனைகளுக்கு அருகில் சென்றேன்.

என்னால் என் கண்களை நம்பவே முடியவில்லை. பூனைகளின் மத்தியில் ஆண் குழந்தை ஒன்று படுத்திருந்தது. மிகவும் அழுக்காக இருந்த அந்தக் குழந்தையை, பூனைகள் நாக்கால் நக்கி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தன.

நான் குழந்தையை நெருங்கவும் பூனைகள் குழந்தையைப் பாதுகாக்கும் வகையில் என்னை நோக்கிச் சீறின. நான் செய்வதறியாது சிறிது பின்வாங்கினேன். பூனைகள், குழந்தை குளிரால் பாதிக்கப்படாத வண்ணம் குழந்தையின் மேல் அரவணைப்பாக படுத்தன. குழந்தை தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தது.

நான் சில உணவுத் துண்டுகளை வீசி பூனைகளின் கவனத்தை திசை திருப்பினேன். பின் குழந்தையை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றேன். அங்கிருந்து குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது'' என்று கூறினார்.

பூனைகள் மட்டும் உரியபடி பராமரிக்கத் தவறியிருந்தால் குழந்தை உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வீடு வாசல் இன்றி வீதியோரம் வசிப்பவரான குழந்தையின் தந்தையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பல நாட்களுக்கு முன்பு தனது குழந்தை காணாமல் போனதாக அவர் கூறினார்.

பிறந்த குழந்தையின் மூளையில் கால் அமெரிக்க மருத்துவர்கள் அதிர்ச்சி!

பிறந்து மூன்றே நாளான ஆண் குழந்தையொன்றின் மூளையில் சிறிய கால் ஒன்று வளர்ச்சி அடைந்திருப்பதைக் கண்டு அமெரிக்க கொலோராடோ ஸ்பிரிங்ஸ் சிறுவர் மருத்துவமனை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இவ்வாறு மூளையில் கால் ஒன்று வளர்ச்சியடைந்திருப்பது கண்டுபிடிக்கப்படுவது, உலக மருத்துவ வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். இது தொடர்பில் மேற்படி மருத்துவமனையின் மருத்துவரும் மூளை சத்திரசிகிச்சை நிபுணருமான போல் கிராப் புதன்கிழமை ஊடகவியலாளர்களுக்கு விபரிக்கையில், 3 நாள் வயதான சாம் எஸ்குயிபெல் என்ற குழந்தையின் மூளையில் வளர்ந்துள்ள காலொன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் குழந்தையின் சின்னஞ் சிறிய மூளையில் மேற்படி காலுடன் சிறுகுடல் மடிப்புகள் போன்ற அமைப்புகளும் காணப்பட்டதாகவும் கூறினார்.

குழந்தையின் மூளையில் கட்டி இருப்பதாக பரிசோதனைகளின் மூலம் தெரிய வந்ததையடுத்து, குழந்தை பிறந்து மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மூலமே இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

கொழுப்பா? மியூசிக் கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க.

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும், இதய பாதுகாப்பிற்கும் இசை கேட்பது நல்ல பலனைத் தரும் என்று தெரிய வந்துள்ளது.இதய நோயாளிகள் தங்களுக்குப் பிடித்தமான இசையை தினமும் சுமார் அரை மணி நேரம் கேட்டால், அவர்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் உடல்ரீதியிலான ஆரோக்கியமும் ஏற்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.இசையை ரசிப்பதால் இரத்த நாளங்கள் விரிவடைவதுடன் சுத்தப்படுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.இசை கேட்பதால், இதய பாதிப்பின்றி இருக்கவும், கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.இசை கேட்கும் சிகிச்சை முறையை அமெரிக்காவில் சில நோயாளிகளுக்கு அளித்து பரிசோதித்ததாகவும், இதனை பிரிட்டன் நிபுணர்கள் வரவேற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.இசையைக் கேட்டு ரசிப்பதால் மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுவதாகவும், இது இரத்தம் உறைவதைத் தடுப்பதுடன் கொழுப்பு சேர்வதையும் கரைப்பதாகத் தெரிய வந்துள்ளது.மனித உடலில் இசையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சியின் ஒருபகுதியாக இது அமைந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிம்பொனி இசை மனநலத்தை மேம்படுத்தக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்காக உயிரையும் துறக்க தயார்: கலைஞர் கருணாநிதி

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கு அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு இனியும் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சினை. அதற்கு தீர்வு காண்பதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை.
மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தமிழனின் பிணம் விழுகிறது. அவர்களை புறம் தள்ளி இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற அனைவரும் உறுதி ஏற்போம். இலங்கை தமிழர்களுக்காக எதையும் துறப்போம். தேவைப்பட்டால் உயிரையும் துறப்போம் என்றார்.
எனவே ஏற்கனவே நானும் மற்றைய கட்சி தலைவர்களும் சந்தித்தபோது அளித்த உறுதிமொழியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மத்திய அரசு இதற்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்கிறேன். இது விஷயமாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முறையிட்ட போது அவர் எங்களுக்கு தந்த வாக்குறுதி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அந்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். அந்த வாக்குறுதியை வலியுறுத்தியே இங்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. எனவே இந்த பொதுக்குழு தீர்மானத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசு அதனை நிறைவேற்றி தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறது. அந்த வரிசையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை களையும் சாதனையையும் செய்து முடிக்க வேண்டும். அங்கே தமிழர்கள் அன்றாடம் உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்த குறுக்கு வழியில் மத்திய அரசை மிரட்ட நாம் விரும்பவில்லை. என்னுடைய நிலையை, திமுகவின் நிலையை, தமிழக மக்களின் நிலைப்பாட்டை சட்டமன்றத்திலே விளக்கியிருக்கிறேன். இலங்கை தமிழர் பிரச்சனையில் இளம் தலைவர் ராஜீவ்காந்தியின் மறைவுக்கு பிறகு; மறைவுக்கு முன்பு என்று இரண்டு பிரிவாக பார்க்க வேண்டுமென்று நான் கூறி இருக்கிறேன். இன்றைக்கு இலங்கையிலே தமிழர்கள் போர் காரணமாக இன்னமும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்கள் மனதில் ரணம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடைய ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடைய புண்ணுக்கு மருந்து போட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்று நான் உருக்கமான வேண்டுகோளை விடுக்கிறேன். இந்த கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும். இதற்காக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மிக மிக பணிவாகவும், மிக மிக உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கை தமிழர்களுக்காக வாதாடுவதை சிலர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லி வக்கிரப் புத்தியுடன் நடந்து கொள்கிறார்கள்.
இதன் பிறகாவது மத்திய அரசு மனம் இறங்கி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் இதனையே முக்கிய தீர்மானமாக கருதி மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கருணாநிதி. தீர்மானங்கள்
முன்னதாக, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்துவதற்கு ஏற்கனவே பிரதமர் அளித்த வாக்குறுதிபடி பிரணாப் முகர்ஜியை விரைந்து அந்நாட்டுக்கு அனுப்ப வேண்டும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்மையில் முதல்வரை சந்தித்து பேசியதை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இணங்க தமிழ்நாட்டில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை புதிய பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த கரவொலி ஆதரவுடன் அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Saturday, December 27, 2008

'அப்பக்கோப்பை' பற்றிய ஓர் ஆராய்ச்சி

எல்லாருக்கும் இந்தச் சொல் தெரியுமோ தெரியாது. எங்கட இடத்தில குறிப்பிட்ட இளமட்டத்தில இந்தச்சொல் பாவனையில இருந்திச்சு. இன்னொருத்தனைத் திட்டவோ மட்டந்தட்டி நக்கலடிக்கவோ இந்தச் சொல்லைப் பாவிப்பம்.ஒருத்தன் விளங்காத்தனமாக அல்லது சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்தால் அல்லது தொடர்ச்சியாக ஒரேதவறைச் செய்தால், எப்படி முயன்றும் ஒருத்தனைத் திருத்த முடியாதென்று எரிச்சல் தோன்றும்போது இச்சொல்லைப் பாவித்துத் திட்டுவதுண்டு.'அவனொரு அப்பக்கோப்பை. ஒரு இழவும் விளங்காது' எண்டு ஒருத்தனத் திட்டுவோம். அதேபோல் திட்டும் வாங்குவோம்.இதன் சரியான தோற்றம், காரணகாரியங்கள் எதுவுமறியாமலேயே ஆனால் சரியான சந்தர்ப்பங்களில் இச்சொல்லைப் பாவிப்போம். எந்த இடங்களில் இச்சொல்லைப் பாவிப்பதென எல்லாருக்கும் தெரிந்திருந்தது.சரி இந்தச் சொல்லின் சரியான அர்த்தத்துக்கு வருவோம். அப்பக்கோப்பை என்றால் அப்பம் சுடும் தாச்சியைக் குறிக்கும். அப்பத்தாச்சி என்ன செய்யும்? எதையும் தன்னிடம் வைத்துக்கொள்ளாது. அதில் ஊற்றும் மாவை அப்படியே அப்பமாக்கி சிறுதுண்டுகூட தாச்சியில் ஒட்டாதபடிக்கு அழகாக அப்படியே திருப்பிக்கொடுத்துவிடும்.தோசைக்கல்லிற்கூட மாவு ஒட்டும், இட்லிச்சட்டியில் மாவு ஒட்டும். ஆனால் அப்பத்தாச்சியில் எப்போதாவது மாவு ஒட்டிப்பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அந்தச் சட்டியின் சிறப்பு.இங்கே இச்சொல்லை அப்பக்கோப்பை என்று மாற்றி ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு (இதுகளப் போடாட்டி பிறகு சண்டைக்கு வருவியள்) திட்டுவதற்குப் பாவிக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால் எப்படி அப்பச்சட்டி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் தனக்குள் ஊற்றப்படும் சகலதையும் திருப்பிக்கொடுத்துவிடுகிறதோ அதேபோல் இவர்களும் எதையும் உள்வாங்கிக்கொள்வதில்லை. அனைத்தையும் திறந்துவிடுவார்கள். இவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் திருந்தப்போவதில்லை என்ற கருத்தில் இச்சொல் பாவிக்கப்படுகிறது.இன்றும் ஏராளமானவர்கள் இச்சொல்லின் விளக்கத்தை அறியாமல் பாவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விளக்கும் முகமாகவே இப்பதிவு போட்டேன்.திடீரென்று ஏனிந்தச் சொல் பற்றி யோசினை வந்ததெண்டா, இப்ப தான் கொஞ்சத்துக்கு முதல் ஒருத்தரை நேர திட்டிப்போட்டன். அவருக்கு இந்தச்சொல் புதுசு. அதுக்கு அவர் விளக்கம் கேட்டார். அவருக்கு விளங்கப்டுத்தின கையோட அதையே ஒரு பதிவாப்போடுறன்.அப்பக்கோப்பையள் ஆராவது என்ர வலைப்பதிவப் பாக்க வருவினந்தானே. அவையளுக்கு ஒரு விளக்கமா இருக்கட்டுமெண்டு போட்டு வைக்கிறன்.'பன்னாடை' எண்டு திட்டுறதுக்கும் இதுக்கும் கிட்டத்தட்ட ஒரே பொருளாத்தான் இருக்கு. ஆனா பன்னாடை எண்டு திட்டினா கடுமையாக் கோவம் வரும். மாறாக அப்பக்கோப்பையெண்டது அதே கருத்தைத்தாற ஆனா ஏச்சு வாங்கிறவன்(ள்) சிரிச்சுக்கொண்டே கேட்டுக்கொண்டு போற மாதியொரு சொல்லு.நீங்களும் ஏன் திட்டுவதற்கோ ஏசுவதற்கோ இந்தச்சொல்லைப் பாவிக்கக்கூடாது?முயன்றுபாருங்கள்.

Friday, December 26, 2008

பப்பாளி பழத்துக்குள் மனிதக் கரு வடிவம் !

தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன் தினம் மார்க்கெட்டில் பப்பாளி பழம் வாங்கி வந்தார். வீட்டில் வந்து அதை அறுத்த போது, விதை இருக்க வேண்டிய பகுதியில் மனித கருவைப் போன்ற தோற்றம் இருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்களும் அதை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அந்த தெரு மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றனர். நெரிசல் அதிகமானதால், போலீசார் வந்து பப்பாளிப் பழத்தை ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர்.

Saturday, December 13, 2008

மழைநீரும், மறுபக்கம் கண்ணீருமாக ரணமாகிக் கிடக் கிறார்கள், ஈழத் தமிழர்கள். அப்பாவி ஈழத் தமிழர்கள் மீதான அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தில் தினம் ஒரு போராட்டம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதற்கிடையே, தமிழக அனைத்துக் கட்சிக் குழு, முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த நான்காம் தேதி சந்தித்தது.
அனைத்துக் கட்சிக் குழுவின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசுடன் பேச மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அந்நாட்டுக்கு அனுப்ப பிரதமர் உறுதி அளித்தார். அந்தச் சந்திப்பின் போது பிரதமருடன் பேச, அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தலா ஒரு நிமிடம் ஒதுக்கப்பட்டதாம். தன்னுடைய முறை வந்ததும், பிரதமருடன் பேசத் தொடங்கிய இலட்சியத் தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தரை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசவிடாமல் தடுக்க, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபற்றி விஜய டி.ஆரிடமே நேரில் கேட்டோம். மனிதர் பொரிந்து தள்ளிவிட்டார்.
``பிரதமர் சந்திப்பின்போது முதல்வர் கலைஞர், தான் எழுதி வைத்திருந்த குறிப்பை பிரதமர் முன்னிலையில் படித்தார். அடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸும் பேசினார்கள். இருபதுக்கு மேற்பட்ட தலைவர்கள் இருந்தபோதும் சிலர் மட்டுமே பேசினோம். அதில் நானும் ஒருவன். திருமாவளவன் பேசிமுடித்ததும் நான் பேசினேன்.
அப்போது, `நான் புதிதாக ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஏற்கெனவே இப்பிரச்னை தொடர்பாக, தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், சட்டசபையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அந்தக் கருத்தின் அடிப்படையில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு கருத்துக்கே இங்கு இடமில்லை. ஈழத்தில் இன்னும் குண்டுமழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. பள்ளிக் குழந்தைகள் கூட இரக்கமின்றிக் கொல்லப்படுகிறார்கள். ஈழத் தமிழர்கள் மீதான அத்துமீறல்களை தமிழக மக்கள் இரக்கத்துடனும், கவலையுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதால், தமிழகத்தில் உருவான தாக்கம் இப்போது மாறிவிட்டது. அன்றைக்கு இருந்த சூழ்நிலை வேறு. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலை வேறு. இந்த நேரத்தில், இலங்கை அரசுக்கு எதிராக தமிழர்களின் நலன் காக்க உங்களுடைய (காங்கிரஸ்) அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏனென்றால், கடந்த காலக் கசப்பை மனதில் வைத்துக் கொண்டு விடுதலைப்புலிகளைப் பழிவாங்குவதாக நினைத்து, ஈழத் தமிழர்கள் நலன் காக்க நீங்கள் விரும்பவில்லை என்று, தமிழக மக்கள் நினைக்கிறார்கள். இதற்கு மாறாக, ஒட்டுமொத்த தமிழகமும் விடுதலைப் புலிகளை எதிர்ப்பது போன்ற ஒரு மாயையை சிலர் உங்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்' என்று பிரதமரிடம் சொன்னேன். அப்போதுதான் என் பேச்சை இடைமறித்த தங்கபாலு, `விடுதலைப் புலிகளுக்கு எதிரான எண்ணம் தமிழக மக்களிடம் இன்னும் இருக்கு' என்றார்.
உடனே அதை நான் மறுக்க, எனக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த டி.ஆர்.பாலு எங்களை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது, தங்கபாலுவை இடைமறித்த பிரதமர், `அவரைப் பேச விடுங்கள்' என்று என் பேச்சை கவனமாகக் கேட்கத் தொடங்கினார். `இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்த அரசு முயற்சி எடுக்கவில்லை என்றால், வரும் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும்' என்று சொல்லி, என் பேச்சை முடித்துக் கொண்டேன். என்னைப் பேசவிடாமல் தங்கபாலு தடுத்தபோது, அங்கிருந்த தமிழகத் தலைவர்கள் யாரும் என் கருத்துக்கு ஆதரவாகப் பேச முன்வரவில்லை.''
`அப்படியென்றால் ராஜீவ் கொலையை நியாயப்படுத்துகிறீர்களா?' என்றோம் நாம் டி.ஆரிடம்.
``ராஜீவ் படுகொலை நாட்டிற்குப் பேரிழப்பு என்பதை மறுக்கவில்லை. ஆனால், ராஜீவ் இறந்துவிட்டார் என்ற பழைய ஒப்பாரியை தங்கபாலு போன்றவர்கள் பாடிக்கொண்டிருந்தால், தமிழகத்தில் அது பலனளிக்காது. பிரதமரிடம் பேசவிடாமல் என் குரல்வளையை நசுக்குவது என்ன ஜனநாயகம்? இதற்கு எதற்கு அனைத்துக் கட்சிக் குழு? தங்கபாலு மட்டுமே சென்று பிரதமரிடம் தன் கருத்தைச் சொல்லியிருக்கலாமே?
ராஜீவ் குடும்பத்துக்கு தமிழக காங்கிரஸார் விசுவாசமாக இருக்கும்போது, தமிழினத்துக்கு நாங்கள் விசுவாசமாக இருக்கக் கூடாதா? ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து மாநில சிறுசேமிப்புத்துறை துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். அன்றைக்கு நான் ஏற்றி வைத்த சிறு விளக்குதான் இன்றைக்கு திருவண்ணாமலை தீபம் போல் பற்றி எரிகிறது. இதை கலைஞர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்!
ஈழத் தமிழர்களுக்காக தா.பாண்டியன் கூட்டம் கூட்டினாலும் போகிறேன். முதல்வர் கூட்டம் கூட்டினாலும் போகிறேன். காரணம், நான் தமிழன். நேற்றுப் பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த விஜயகாந்த், ஈழத் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. `அம்மா' கோபித்துக் கொள்வார் என்று தான் அந்தக் கூட்டங்களை விஜயகாந்த் புறக்கணித்தார். அதுமட்டுமா காரணம்? என் தமிழினம் உன் `மனவாடு' இல்லை என்பதால்தானே நீ (விஜயகாந்த்) கூட்டத்துக்கு வரவில்லை.
கன்னட மக்களின் நலனுக்காக நடத்தப்படும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒரு கட்சியாவது கர்நாடகத்தில் இருக்க முடியுமா? கன்னட மக்களின் இந்த மொழி உணர்வு, தமிழனுக்கு இல்லையே? ராஜ்தாக்கரேவை எதிர்த்து, வட இந்திய அரசியல்வாதிகள் ஒரே நிலைப்பாட்டை எடுத்தார்கள். அந்த ஒற்றுமையும் இங்கு இல்லையே?'' என்ற அவரிடம், `வெளியுறவுத் துறை அமைச்சரை அங்கு அனுப்புவதன் மூலம் இப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?' என்றோம்.
``பிரணாப் முகர்ஜியை அங்கு அனுப்பிவிட்டு, குச்சி ஐஸ் சூப்பிக்கிட்டு சும்மா (!) இருந்துவிடுவேனா? இந்தப் பிரச்னையில் என்னுடைய குரல் தொடர்ந்து ஒலிக்கும். இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். தாய்த் தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களில் பெரும் பகுதியை சிங்களச் சிறுநரிகள் அபகரித்துக் கொள்வதாக எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷே, தமிழர்களைக் கொன்று `மகிழ்ந்த' ராஜபக்ஷே என்பதை பலமாகப் பதிவு செய்யுங்கள்'' என்று முடித்துக் கொண்டார்.

நமீதாவைத்தேடிய மூன்று கோடி பேர்!

2008 ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் அதிகபட்சமாக தேடிய விவரங்களின் பட்டியலை கூகுல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியாவிலேயே அதிகமாக தேடப்பட்ட நடிகையாக இந்தி நடிகை கேத்ரீனா கைப் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தை இந்தி நடிகர் சல்மான்கான் பிடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தை தமிழ் நடிகை நமீதா பிடித்திருக்கிறார்.உலக அழகி ஐஸ்வர்யாராய் நமீதாவுக்கு பிறகு நான்காவது இடத்தில் உள்ளார்.
நமீதாவின் பெயர் மூன்று கோடிக்கும் மேல் இணையதளத்தில் தேடப்பட்டிருக்கிறது. இதைக்கேள்விப்பட்டதும் போதும் எப்டி சொல்றதுன்னே தெரியல...என்று தன் சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார் நமீதா.

‘’ கூகுல் இணையதளத்தில் அதிக முறை தேடப்பட்ட நடிகையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரசிகர்கள் தான் காரணம். இணையதளத்தில் என்னைத்தேடிய மூன்று கோடி பேர்களுக்கும் நன்றி’’ என்று சொல்லி மகிழ்கிறார்.

நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?

"வங்கிகளுக்கு பணம், எங்களுக்கு மரணம்" - ஐரோப்பாவின் புரட்சிப்புயல் மையம் கொண்டுள்ள கிறீஸ் நாட்டு தெருக்களில் ஒலிக்கும் சுலோகம் அது. சர்வதேச தொலைக்காட்சி கமெராக்கள் மறுபக்கம் திரும்பி விட்டதால், அங்கே எல்லாம் வழமைக்கு வந்துவிட்டது என்ற அர்த்தம் இல்லை. மக்கள் சக்தியை குறைவாக கணித்த அரசாங்கத்திற்கு முன்னே இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன. ஒன்று, முதலாளிகளுக்கு சேவை செய்த குற்றத்திற்காக நாட்டை விட்டு ஓடுவது. இரண்டு, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் பாசிஸ சர்வாதிகார ஆட்சியை கொண்டுவருவது. நிதி நெருக்கடிக்குப் பின்னர், கிறீசில் பாமரனுக்கும் அரசியல்-பொருளாதாரம் புரிகின்றது: "அரசாங்கம் வழக்கமாக கல்விக்கு, மருத்துவத்திற்கு, பிற பொதுநல சேவைகளுக்கு செலவிட பணமில்லை என்று கையை விரிக்கிறது. அதேநேரம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்க பணம் எங்கிருந்து வந்தது?"
அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச் சந்தையின் வீழ்ச்சியும், நிதி நெருக்கடியும் ஏற்படுத்திய விளைவுகள் உலகம் முழுவதும் எதிரொலித்தது. சூரியனை சுற்றும் கோள்கள் போல, அமெரிக்காவை சுற்றியே உலக பொருளாதாரம் அமைந்திருந்ததால், பழைய வல்லரசான ஐரோப்பா முதல், எதிர்கால வல்லரசான சீனா வரை பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், பொருளாதாரம் நன்றாக இருந்த காலங்களில், தமது பிரசைகள் அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி போன்ற பல சலுகைகளை வழங்கி வந்தன. ஆனால் அந்த உரிமைகள் யாவும் தற்போது மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த தருணத்தில் தான் அமெரிக்காவில் நிதி நெருக்கடி வந்து, முதலாளித்துவ சொர்க்கத்திற்கு குழி தோண்டியது.
பிரிட்டன் முதல் இந்தியா வரை நெருக்கடியில் இருந்து மீள, அமெரிக்கா வேண்டிக்கொண்டதன் படி, பொது மக்களின் வரிப்பணத்தைக் கொடுத்து வங்கி முதலாளிகளை காப்பாற்றியது போல தான், கிறீசின் வலதுசாரி அரசாங்கம் செய்தது. அதன் விளைவு தான் நாடளாவிய கலவரம். இந்த நிலைமை நாளை இந்தியாவிலும் வரலாம். அதனால் தான் வர்த்தக உலகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்தியாவும், பாகிஸ்தானும் போர் ஆயத்தங்களில் இருந்து பின்வாங்கி வருகின்றன. மும்பை தாக்குதலுக்கு முன்பு, (அடித்தட்டு மக்களை ஆயுதமயப்படுத்தும்) "நக்சலைட் பிரச்சினை" பெரிய சவாலாக இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டது இங்கே நினைவு கூறத்தக்கது.
மீண்டும் கிறீசிற்கு வருவோம். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கிடைத்த தகவல்கள், அங்கே நிலைமை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்றும், போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றது என்றும் தெரிவிக்கின்றன. நான் முன்பு குறிப்பிட்டது போல, எங்கேயாவது சண்டை, கலவரம் என்றால் தான் ஊடகங்கள் அக்கறை செலுத்தும். அது ஓய்ந்து விட்டால், அந்த நாட்டையே மறந்து விடுவார்கள். கிறீசின் தலைநகரான ஏதென்ஸ் இப்போதும் போரால் பாதிக்கபட்ட பூமி போல காட்சி தருகின்றது.
கலவரத்தை தொடக்கி வைத்த (16 வயது சிறுவனை போலிஸ் சுட்டதன் காரணமாக), ஏதென்ஸ் நகராட்சிக்குட்பட்ட பகுதியான "எக்சாரியா" முழுவதும் அனார்கிஸ்டுகள் என்ற இடதுசாரி இளைஞர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகரத்தின் மையப் பகுதியான "ஒமானியா", கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல்கலைக்கழகங்களை அனைத்து இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்த இடங்களில் எல்லாம் பொலிஸ் பிரசன்னம் இல்லை. (இரகசிய பொலிஸார் சிவில் உடையில் நடமாட வாய்ப்புண்டு.) மேலும் இந்த கட்டுப்பாட்டு பிரதேசங்களை சுற்றி தெருக்களில் தடை அரண்கள் போடப்பட்டுள்ளன. பொலிஸ் அதற்கு வெளியில் இருந்து கொண்டு, கண்ணீர் புகை குண்டுகளை அடித்துக் கொண்டிருக்கிறது. (கையிருப்பில் இல்லாததால், மேலதிக புகைக்குண்டுகள் தருவிக்கப்படுகின்றன). நாடு முழுவதும் 25 பொலிஸ் நிலையங்கள் மாணவர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. முற்றுகைக்குள்ளான பொலிஸ்காரர்கள் தினசரி கல்வீச்சுக்கு உள்ளாகின்றனர். (இந்த செய்தி பி.பி.சி.யிலும் வந்தது.)
ஏதென்ஸ் நகர பொருளாதாரம் அனேகமாக ஸ்தம்பித்து விட்டது. நிலைமை சீரடையும் என்று நம்பி ஏமாந்த அரசாங்கமும், முதலீட்டாளர்களும் இரகசிய இடங்களில் கூட்டம் கூட வேண்டி உள்ளது. நகரத்தில் இருந்த ஆடம்பர வணிக வளாகங்கள் எல்லாம் தீயில் கருகி சாம்பலாகி கிடக்கின்றன. நகரின் ஐ.டி. நிறுவனங்களின், கணணி விற்பனை நிலையங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் தங்கி நின்று, அரசியல் கூட்டங்கள் போடும் மாணவர்கள், தமது உணவுத் தேவைக்காக அவ்வப்போது பல்பொருள் அங்காடிகளை சூறையாடி வருகின்றனர். அங்கு இருக்கும் பொது மக்களுடன், "முதலாளிகளின் சொத்தில் இருந்து அபகரித்த" உணவுப்பொருட்களை பகிர்ந்து கொள்கின்றனர். போராட்டத்தில் கலந்து கொள்ள பெருமளவு பாடசாலை மாணவர்களும் வருகின்றனர். இப்போது அங்கே 12 வயது சிறுவனுக்கும் பெட்ரோல் குண்டு தயாரிப்பது எப்படி என்று தெரியும்.
ஏதென்ஸ் நகர தெருக்களில் செங்கொடிகள் அதிகமாக காணப்படுகின்றன. முதலாளித்துவ எதிர்ப்பு புரட்சிக்கான அறைகூவல் விடுக்கும் துண்டுப்பிரசுரங்களும், பத்திரிகைகளும் பல்கலைக்கழக மாணவர்களால் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் கல்லூரி வளாகத்தினுள்ளே அச்சடிக்கப்படுகின்றன. இணையம், எஸ்.எம்.எஸ். என்று எல்லா தொழில்நுட்ப வசதிகளும் போராட்டங்களுக்கு தயார்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. (திட்டமிட்டபடி ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.) வானொலி நிலையம் ஒன்று அமைக்கும் பணியிலும் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் இளைஞர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றனர். பெருமளவு வெளிநாட்டு குடிவரவாளர்கள், அகதிகள், போராட்டத்தில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

கிறீஸ் பிரச்சினை பிற ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாம் என்று அஞ்சப்படுகின்றது. அதற்கான அறிகுறிகள் இப்போதே தோன்ற ஆரம்பித்துள்ளன. பிரித்தானியாவிலும், ஜெர்மனியிலும் கிறீஸ் தூதுவராலயம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. லண்டனில் பொலிஸ் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்து, முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்தது. ஸ்பெயினிலும், டென்மார்க்கிலும் நிலைமை எல்லை தாண்டியது. ஆர்ப்பாட்டக்காரருக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் வந்ததால், சிறிய கலவரம் வெடித்தது. வண்டிகள், கடைகள், வங்கிகள் என்பன தீக்கிரையாயின. பலர் கைது செய்யப்பட்டனர்.
பிற ஐரோப்பிய நகரங்களில் நடந்த கலவரங்கள், ஊடகங்களின் கவனத்தை பெறாவிட்டாலும், அரச மட்டத்தில் எதிர்காலம் குறித்த அச்சம் நிலவுகின்றது. குறிப்பாக இத்தாலிய அரசு, அண்மையில் கல்விக்கான செலவினத்தை குறைத்ததை எதிர்த்து, அங்கேயும் மாணவர்கள் போராடி வருகின்றனர். ஜெர்மன் மாணவர்கள் இலவச கல்வி கோரி போராடினார்கள். இன்றுவரை அமைதியான வழியில் நடந்து வரும் மாணவர் போராட்டம், வன்முறையாக மாறுவதற்கு தேவைப்படுவது, ஒரு சிறு பொறி மட்டுமே. கிறீசிலும் அதுதான் நடந்தது. ஒரு சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸ்காரனின் முன்யோசனையற்ற செயல், இளைஞர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த கோபத்தை, எரிமலையாக வெடிக்க வைத்தது.

Sunday, December 7, 2008

இந்தியாவுக்குள் வேவு பார்க்க வந்த பாகிஸ்தான் கழுகு

மும்பைத் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் எல்லையோரத்தில் இந்தியா தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரை நோக்கி கழுகு ஒன்று பறந்து வந்தது.

அதை உற்றுப்பார்த்த நமது ராணுவ வீரர்கள், அதன் இறக்கைகளில் ஒருவிதக் கருவி பொருத்தப்பட்டு இருப்பதைக் கண்டறிந்தார்கள். உடனே அந்தக் கழுகை கடும் முயற்சிக்குப் பின் மடக்கிப் பிடித்தனர்.

அந்தக் கழுகின் இறக்கைகளில் வேவு பார்க்கும் கருவியும், சிறிய ஆண்டெனா ஒன்றும் இருந்தன. இந்தக் கழுகை பாகிஸ்தானிய ராணுவத்தினர்தான் அனுப்பியிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

இந்தக் கருவிகளை இயக்குவதற்காக 3 வோல்ட் திறன் கொண்ட பேட்டரியும் இணைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கருவிகளை இந்திய ராணுவ வீரர்கள் ஜோத்பூருக்குக் கொண்டுவந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

திசைகளை அறிவதற்காக, பறவையில் இக்கருவியைப் பொருத்தி வேவு பார்த்திருக்கலாம் என்றும், இந்திய பாதைகளைப் படம் பிடிக்கும் கருவியும் இணைக்கப்பட்டிருக்கின்றதா? என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

Thursday, December 4, 2008

பராக் ஒபாமாவால் சுயாதீனமாக செயற்பட முடியுமா?

ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது அந் நாட்டின் ஆட்சி நிர்வாகத்திற்கு மிக முக்கியமானதாகும். அந்த வெளியுறவுக் கொள்கையின் நிலையைத் தீர்மானிப்பதில் வெளியுறவு அமைச்சரின் பங்கு செல்வாக்குச் செலுத்துகிறது.

உலகின் பொலிஸ்காரன் என தன்னை நினைத்துக் கொள்ளும் அமெரிக்காவில் 2009 ஜனவரியில் புதிதாக கறுப்பின தலைவர் பராக் ஒபாமா பதவியேற்கவுள்ளார். இவரது அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வி கண்டவருமான ஹிலாரி கிளின்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நியமனமானது அரசியல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் அவதானிகள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரே கட்சியில் எதிர்த்துப் போட்டியிட்டவரை மிக முக்கியமான பதவியில் அமர்த்தி விட்டு இணைந்து செயற்படுவதென்பது மிகவும் கடினமான செயலாகவே கருதப்படுகிறது.

ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் கறுப்பினத்தனவரான கொண்டலீசா ரைஸ் வெளியுறவு அமைச்சராக உள்ளார். சில சமயத்தில் ஒபாமா கறுப்பினத்தவராக இருப்பதால் தனது ஆட்சிக்காலத்தில் வெள்ளையினத்தவர் ஒருவரை வெளியுறவு அமைச்சராக நியமிக்க எண்ணியிருக்கலாம்.

எவ்வாறாயினும்ம், ஒட்டுமொத்த அமெரிக்காவின் வெளியுறவு நிலைமையில் பாரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

Wednesday, December 3, 2008

சினிமா தயாரிப்பாளரின் வயிறோ கலங்குகிறது

கலைஞருக்கு, ஸ்டாலின் அழகிரிஎன்ற கண்கள் பணித்ததாம். இதயம் கலாநிதியை மன்னித்ததாம்!!!
கலைஞருக்கு கண்கள் பனித்தது; இதயம் இனித்தது; சினிமா தயாரிப்பாளரின் வயிறோ கலங்குகிறது.;இவர்களை நம்பி கட்சி கட்டிக் கொடிபிடித்தவர்கள் கோவணமுமில்லாது போனார்கள்.பிரிந்து கொண்ட தொலைகாட்சிகளின் கதி? தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.. ஆனால் தாத்தாவும், அவரது மகனும், சொன்னதின் பேரில் அவர்களுக்கு போட்டியாய் தொழிலில் இறக்கி விடப்பட்டவர்கள் என்னாவார்கள்..?இந்த சந்திப்பை வெற்றிகரமாய் சாதித்த பங்கு அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் உண்டு என்றார் கலைஞர்.. தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முக்கியமான சந்திப்பு.. இவர்கள் சந்திப்பால் தமிழகம் செழித்தோங்க போகிறதோ..? வைகை தமிழ் நாட்டுக்குள் பாய்ந்து வரப் போகிறதா?? ஈழத்தமிழனின் தலயில் விழும் குண்டுகள் நிறுத்தப் படுமா?அனாவசியமாக தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் இறந்த அல்லது அழகிரியாட்களால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் மூன்று பேரின் உயிர்களும் வந்து விடுமா ?வழக்கமாய் கலைஞர் குடும்பத்திற்கு ஓரு வழக்கம் உண்டு, அதாவது அவர்களுக்கு உதவியவர்களை முடிந்த வரை உபயோகப்படுத்திக் கொண்டு பின்பு தேவையில்லையெனில் கழட்டிவிடுவது, அதையே அவரது பேரன்களும் செய்யவே கோபம் வந்து பிய்த்து கொண்டார்களாம்... அவர்களுக்கும் வேறு வழியில்லை.. என்ன செய்வது.. வாய்விட்டே சொல்லியும் விட்டாராம் கலைஞர் தனக்கு "ரவுண்டாய்"க் கொடுக்கவில்லை என்று.. ஓரு வேளை இப்பொழுது ரவுண்டாய்க் கொடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது.. அவர்கள் சிறந்த வியாபாரிகள் என்பதை மீண்டும் ஓரு முறை நிருபித்திருக்கிறார்கள். கொடுக்க வேண்டியதை கொடுத்து அவர்களின் வங்கி வைப்புகள் கனத்ததால் தானோ என்னவோ கலைஞரின் கண்கள் பனித்தது.. இதயம் கனத்ததோ..? எது எப்படியோ?? இந்தக்கூட்டுறவால் நன்மை நிகழ்ந்தால்ச் சரி.