Friday, October 24, 2008

கங்குலியின் ஓய்வு விருப்பமா? நிர்ப்பந்தமா?

இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த சௌரவ் கங்குலி களத்தில் நிற்கும் வரை எதிரணி வீரர்களும், ரசிகர்களும் பதற்றமாக இருப்பார்கள். ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஒருசில வீரர்களில் கங்குலியும் ஒருவர். மகிழ்ச்சியுடன் விடைபெற வேண்டிய கங்குலி மனமொடிந்து விடை பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றபோது கங்குலி அணியில் சேர்க்கப்பட்டார். டெஸ்ட் போட்டியில் விளையாடிய 11 வீரர்களின் பெயர்ப்பட்டியலில் கங்குலி இடம்பெறவில்லை. இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நவ்ஜோத் சித்து அணியின் நிர்வாகிகளுடன் பிரச்சினைப்பட்டதன் காரணமாக இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிவிட்டார்.
சித்துவின் இடத்தை நிரப்பக்கூடிய வீரர் இந்திய அணியில் இல்லை என்றாலும் தேர்வாளர்கள் கங்குலியைக் களமிறக்கினார்கள். தேர்வாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திய கங்குலி 131 ஓட்டங்கள் அடித்து இந்திய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.
சச்சினும், கங்குலியும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி டெஸ்ட்டிலும், ஒருநாள் போட்டியிலும் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். கங்குலியின் திறமை காரணமாக இந்திய அணியின் தலைமைப்பதவி தேடி வந்தது. இந்திய அணியின் தூண்களில் ஒருவராக இருந்த கங்குலிக்கு இந்திய அணியின் பயிற்சியாளரான செப்பலின் உருவில் பிரச்சினை ஆரம்பமானது.
கங்குலியை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் பயிற்சியாளர் செப்பல் குறியாக இருந்தார். கங்குலியின் திறமையாலும் அவருக்கு இருந்த அரசியல் செல்வாக்காலும் கங்குலியை அசைக்க முடியவில்லை.
கங்குலியின் திறமையும் அரசியல் செல்வாக்கும் சரியத் தொடங்கியதும் கங்குலிக்கு சோதனை ஏற்பட்டது. வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக்குழு ஒருநாள் அணியில் இருந்து கங்குலியை வெளியேற்றியபோது கங்குலிக்கு அணியில் இனி இடமில்லை என்று வெளி உலகுக்குத் தெரிந்தது.
சற்றும் தளராத விக்கிரமாதித்தன்போன்று உள்ளூர்ப்போட்டிகளில் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்திய கங்குலி தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பினார். ஷேவாக், சுரேஷ் ரெய்னா, கௌதம் கம்பீர் ஆகியோரின் அதிரடியினால் கங்குலியின் இடம் பறிபோனது.
இளம் வீரர்களின் அதிரடி ஆட்டத்தினால் கங்குலியுடன் ட்ராவிட், லக்ஷ்மன் ஆகியோரும் பாதிக்கப்பட்டனர். ஒரு நாள் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட இவர்கள் டெஸ்ட்போட்டிகளில் மட்டும் விளையாட அனுமதிக்கப்பட்டனர்
டெஸ்ட்போட்டிகளிலும் இவர்கள் மூவரும் சோபிக்காததனால் திறமையுள்ள இளம் வீரர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் அண்மைக்காலப் போட்டிகளில் அதிகம் சோபிக்கவில்லை. காயம் ஏற்படுவதாலும் உடல் தகுதி இல்லாததாலும் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
புதிய தேர்வுக்குழு பதவி ஏற்றதும் டெஸ்ட்போட்டியில் விளையாட தனக்கு இடம் கிடைக்கும் என்று கங்குலி உறுதிப்படக்கூறினார். கங்குலி, ட்ராவிட், லக்ஷ்மன் ஆகியோருக்கு டெஸ்ட்போட்டிகளில் சந்தர்ப்பம் வருமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஒரு பக்கத்தில் நடைபெற்றது. இவர்கள் மூவருக்கும் தேர்வுக்குழு சந்தர்ப்பம் வழங்கும். அதேவேளை கௌரவமான முறையில் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு வழிவிடப்படும் என்ற கருத்தும் நிலவியது.
ரமணி
நன்றி:மெட்ரோ
எதிர்பார்த்தது போன்றே கங்குலி, ட்ராவிட், லஷ்மன் ஆகியேõருக்கு டெஸ்ட் அணியில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. டெஸ்ட்போட்டி ஆரம்பமாவதுற்கு முன்னரே அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறப்போவதாக கங்குலி அறிவித்துவிட்டார்.
கங்குலியைப்பற்றிய காட்டூன்களும், நகைச்சுவைத் துணுக்குகளும் மிக அதிகமாக வெளிவந்தன. நகைச்சுவை என்ற பெயரில் கங்குலி நோகடிக்கப்பட்டார்.இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவரான ஸ்ரீகாந்தும், அன்றைய தேர்வுக்குழுவால் ஓரங்கட்டப்பட்டவர் தான். இந்திய அணித்தலைவராக நீண்டகாலம் பணியாற்ற வேண்டிய அவர் தேர்வாளர்களின் ஒருதலைப்பட்சத்தால் ஓய்வு பெற்றார். ஆகையினால் வீரர்களின் ஆதங்கம் அவருக்கு நன்கு புரியும்.
கங்குலி தனது ஓய்வை அறிவித்துவிட்டார். அடுத்து ஓய்வு பெறப்போவது யார்? லக்ஷ்மனா? ட்ராவிட்டா? என்ற கேள்வி ரசிகர்களின் முன்னால் உள்ளது. இதற்கிடையில் கும்ப்ளே ஓய்வு பெறப்போவதாக செய்தி வெளியானது. இதனை அவர் மறுத்துள்ளார். 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாடப்போவதாக டெண்டுல்கர் கூறியுள்ளார்.
கங்குலி, ட்ராவிட், லக்ஷ்மன், குப்ளே ஆகியோர் ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி உள்ளனர்.
ரமணி
நன்றி:மெட்ரோ

0 comments: