Wednesday, October 22, 2008

ஆண்களில் வழுக்கைக்கு அம்மாக்களா காரணம்..?!

ஆண்களில் பிறப்புரிமை சார்ந்து தலையில் முடி (மயிர்) உதிர்தல் (வழுக்கை) ஏற்படுவதற்கு தாயிடம் இருந்து பெறப்படும் இலிங்க நிறமூர்த்தமான (பால் தெரிவு நிறமூர்த்தங்களில் ஒன்று) X வகை நிறமூர்த்தத்தில் (chromosome) உள்ள பரம்பரை அலகே (Gene) காரணம் என்று இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் X நிறமூர்த்தத்தில் உள்ள பரம்பரை அலகுக்கு நிகராக மனிதனில் உள்ள 23 சோடி நிறமூர்த்தங்களில் 20ம் சோடியில் உள்ள பரம்பரை அலகுகளும் செல்வாக்குச் செய்கின்றன என்ற தகவல் தற்போது வெளியிடப்பட்டிருப்பதுடன், அங்கு காணப்படும் தந்தை வழியில் இருந்தும் தாய் வழியில் இருந்தும் பெறப்படும் பரம்பரை அலகுகளால் கூட முடி உதிர்தல் தூண்டப்படலாம் என்ற அறிதலும் பெறப்பட்டுள்ளது.அந்த வகையில் ஆண்களில் முடி உதிர்தலுக்கு தாய் வழி X நிறமூர்த்தத்தில் உள்ள பரம்பரை அலகு மட்டுமன்றி தந்தை வழி பரம்பரை அலகுகளும் காரணமாக இருக்கின்றன என்பதால் தந்தைக்கு முடி உதிர்தல் அல்லது வழுக்கை இருக்கும் பட்சத்தில் மகனுக்கும் இருக்க அதிக வாய்ப்புள்ளது.அது மட்டுமன்றி ஆண்களில் சுமார் 14% பேர் மேற்குறிப்பிட்ட இரண்டு வகை பரம்பரை அலகுகளிலும் முடி உதிர்தலைத் தூண்டும் அலகுகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதுடன் இப்பரம்பரை அலகுகளின் தாக்கத்தால் முடியுதிர்தல் பிரச்சனை 7 மடங்கு அதிகரித்த அளவில் இளமைக் காலத்திலேயே ஏற்பட வாய்ப்பிருப்பதாக குறித்த ஆய்வில் இருந்து கண்டறிந்துள்ளனர். மேலும் ஏதாவது ஒரு முடியுதிர்தல் பரம்பரை அலகுடன் சுமார் 40% ஆண்கள் இருக்கின்றனர்.எனவே முன் கூட்டிய மரபணு அலகு அல்லது பரம்பரை அலகு ஸ்கானின் மூலம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு முன் கூட்டிய முடி உதிர்தலைத்தடுக்க மரபணுச் சிகிச்சை (gene therapy) உட்பட பலவகை சிகிச்சை முறைகளை ஆரம்பிக்க முடியும் அல்லது முடி மீள நாட்டல் மூலம் முடியை வளர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்..!

0 comments: