"வங்கிகளுக்கு பணம், எங்களுக்கு மரணம்" - ஐரோப்பாவின் புரட்சிப்புயல் மையம் கொண்டுள்ள கிறீஸ் நாட்டு தெருக்களில் ஒலிக்கும் சுலோகம் அது. சர்வதேச தொலைக்காட்சி கமெராக்கள் மறுபக்கம் திரும்பி விட்டதால், அங்கே எல்லாம் வழமைக்கு வந்துவிட்டது என்ற அர்த்தம் இல்லை. மக்கள் சக்தியை குறைவாக கணித்த அரசாங்கத்திற்கு முன்னே இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன. ஒன்று, முதலாளிகளுக்கு சேவை செய்த குற்றத்திற்காக நாட்டை விட்டு ஓடுவது. இரண்டு, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் பாசிஸ சர்வாதிகார ஆட்சியை கொண்டுவருவது. நிதி நெருக்கடிக்குப் பின்னர், கிறீசில் பாமரனுக்கும் அரசியல்-பொருளாதாரம் புரிகின்றது: "அரசாங்கம் வழக்கமாக கல்விக்கு, மருத்துவத்திற்கு, பிற பொதுநல சேவைகளுக்கு செலவிட பணமில்லை என்று கையை விரிக்கிறது. அதேநேரம் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்க பணம் எங்கிருந்து வந்தது?"
அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச் சந்தையின் வீழ்ச்சியும், நிதி நெருக்கடியும் ஏற்படுத்திய விளைவுகள் உலகம் முழுவதும் எதிரொலித்தது. சூரியனை சுற்றும் கோள்கள் போல, அமெரிக்காவை சுற்றியே உலக பொருளாதாரம் அமைந்திருந்ததால், பழைய வல்லரசான ஐரோப்பா முதல், எதிர்கால வல்லரசான சீனா வரை பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், பொருளாதாரம் நன்றாக இருந்த காலங்களில், தமது பிரசைகள் அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி போன்ற பல சலுகைகளை வழங்கி வந்தன. ஆனால் அந்த உரிமைகள் யாவும் தற்போது மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த தருணத்தில் தான் அமெரிக்காவில் நிதி நெருக்கடி வந்து, முதலாளித்துவ சொர்க்கத்திற்கு குழி தோண்டியது.
பிரிட்டன் முதல் இந்தியா வரை நெருக்கடியில் இருந்து மீள, அமெரிக்கா வேண்டிக்கொண்டதன் படி, பொது மக்களின் வரிப்பணத்தைக் கொடுத்து வங்கி முதலாளிகளை காப்பாற்றியது போல தான், கிறீசின் வலதுசாரி அரசாங்கம் செய்தது. அதன் விளைவு தான் நாடளாவிய கலவரம். இந்த நிலைமை நாளை இந்தியாவிலும் வரலாம். அதனால் தான் வர்த்தக உலகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்தியாவும், பாகிஸ்தானும் போர் ஆயத்தங்களில் இருந்து பின்வாங்கி வருகின்றன. மும்பை தாக்குதலுக்கு முன்பு, (அடித்தட்டு மக்களை ஆயுதமயப்படுத்தும்) "நக்சலைட் பிரச்சினை" பெரிய சவாலாக இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டது இங்கே நினைவு கூறத்தக்கது.
மீண்டும் கிறீசிற்கு வருவோம். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கிடைத்த தகவல்கள், அங்கே நிலைமை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என்றும், போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றது என்றும் தெரிவிக்கின்றன. நான் முன்பு குறிப்பிட்டது போல, எங்கேயாவது சண்டை, கலவரம் என்றால் தான் ஊடகங்கள் அக்கறை செலுத்தும். அது ஓய்ந்து விட்டால், அந்த நாட்டையே மறந்து விடுவார்கள். கிறீசின் தலைநகரான ஏதென்ஸ் இப்போதும் போரால் பாதிக்கபட்ட பூமி போல காட்சி தருகின்றது.
கலவரத்தை தொடக்கி வைத்த (16 வயது சிறுவனை போலிஸ் சுட்டதன் காரணமாக), ஏதென்ஸ் நகராட்சிக்குட்பட்ட பகுதியான "எக்சாரியா" முழுவதும் அனார்கிஸ்டுகள் என்ற இடதுசாரி இளைஞர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகரத்தின் மையப் பகுதியான "ஒமானியா", கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல்கலைக்கழகங்களை அனைத்து இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்த இடங்களில் எல்லாம் பொலிஸ் பிரசன்னம் இல்லை. (இரகசிய பொலிஸார் சிவில் உடையில் நடமாட வாய்ப்புண்டு.) மேலும் இந்த கட்டுப்பாட்டு பிரதேசங்களை சுற்றி தெருக்களில் தடை அரண்கள் போடப்பட்டுள்ளன. பொலிஸ் அதற்கு வெளியில் இருந்து கொண்டு, கண்ணீர் புகை குண்டுகளை அடித்துக் கொண்டிருக்கிறது. (கையிருப்பில் இல்லாததால், மேலதிக புகைக்குண்டுகள் தருவிக்கப்படுகின்றன). நாடு முழுவதும் 25 பொலிஸ் நிலையங்கள் மாணவர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. முற்றுகைக்குள்ளான பொலிஸ்காரர்கள் தினசரி கல்வீச்சுக்கு உள்ளாகின்றனர். (இந்த செய்தி பி.பி.சி.யிலும் வந்தது.)
ஏதென்ஸ் நகர பொருளாதாரம் அனேகமாக ஸ்தம்பித்து விட்டது. நிலைமை சீரடையும் என்று நம்பி ஏமாந்த அரசாங்கமும், முதலீட்டாளர்களும் இரகசிய இடங்களில் கூட்டம் கூட வேண்டி உள்ளது. நகரத்தில் இருந்த ஆடம்பர வணிக வளாகங்கள் எல்லாம் தீயில் கருகி சாம்பலாகி கிடக்கின்றன. நகரின் ஐ.டி. நிறுவனங்களின், கணணி விற்பனை நிலையங்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் தங்கி நின்று, அரசியல் கூட்டங்கள் போடும் மாணவர்கள், தமது உணவுத் தேவைக்காக அவ்வப்போது பல்பொருள் அங்காடிகளை சூறையாடி வருகின்றனர். அங்கு இருக்கும் பொது மக்களுடன், "முதலாளிகளின் சொத்தில் இருந்து அபகரித்த" உணவுப்பொருட்களை பகிர்ந்து கொள்கின்றனர். போராட்டத்தில் கலந்து கொள்ள பெருமளவு பாடசாலை மாணவர்களும் வருகின்றனர். இப்போது அங்கே 12 வயது சிறுவனுக்கும் பெட்ரோல் குண்டு தயாரிப்பது எப்படி என்று தெரியும்.
ஏதென்ஸ் நகர தெருக்களில் செங்கொடிகள் அதிகமாக காணப்படுகின்றன. முதலாளித்துவ எதிர்ப்பு புரட்சிக்கான அறைகூவல் விடுக்கும் துண்டுப்பிரசுரங்களும், பத்திரிகைகளும் பல்கலைக்கழக மாணவர்களால் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் கல்லூரி வளாகத்தினுள்ளே அச்சடிக்கப்படுகின்றன. இணையம், எஸ்.எம்.எஸ். என்று எல்லா தொழில்நுட்ப வசதிகளும் போராட்டங்களுக்கு தயார்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. (திட்டமிட்டபடி ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.) வானொலி நிலையம் ஒன்று அமைக்கும் பணியிலும் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் இளைஞர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றனர். பெருமளவு வெளிநாட்டு குடிவரவாளர்கள், அகதிகள், போராட்டத்தில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
கிறீஸ் பிரச்சினை பிற ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாம் என்று அஞ்சப்படுகின்றது. அதற்கான அறிகுறிகள் இப்போதே தோன்ற ஆரம்பித்துள்ளன. பிரித்தானியாவிலும், ஜெர்மனியிலும் கிறீஸ் தூதுவராலயம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. லண்டனில் பொலிஸ் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்து, முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்தது. ஸ்பெயினிலும், டென்மார்க்கிலும் நிலைமை எல்லை தாண்டியது. ஆர்ப்பாட்டக்காரருக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் வந்ததால், சிறிய கலவரம் வெடித்தது. வண்டிகள், கடைகள், வங்கிகள் என்பன தீக்கிரையாயின. பலர் கைது செய்யப்பட்டனர்.
பிற ஐரோப்பிய நகரங்களில் நடந்த கலவரங்கள், ஊடகங்களின் கவனத்தை பெறாவிட்டாலும், அரச மட்டத்தில் எதிர்காலம் குறித்த அச்சம் நிலவுகின்றது. குறிப்பாக இத்தாலிய அரசு, அண்மையில் கல்விக்கான செலவினத்தை குறைத்ததை எதிர்த்து, அங்கேயும் மாணவர்கள் போராடி வருகின்றனர். ஜெர்மன் மாணவர்கள் இலவச கல்வி கோரி போராடினார்கள். இன்றுவரை அமைதியான வழியில் நடந்து வரும் மாணவர் போராட்டம், வன்முறையாக மாறுவதற்கு தேவைப்படுவது, ஒரு சிறு பொறி மட்டுமே. கிறீசிலும் அதுதான் நடந்தது. ஒரு சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸ்காரனின் முன்யோசனையற்ற செயல், இளைஞர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த கோபத்தை, எரிமலையாக வெடிக்க வைத்தது.
Saturday, December 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment