Monday, February 23, 2009

மக்களை வெளியேற்ற அமெரிக்கா தலைமையில் மீட்பு நடவடிக்கை: இணைத்தலைமை நாடுகளும் உதவி

வன்னியில் சிக்குண்டிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளின் உதவியுடன், அமெரிக்காவின் தலைமையின் கீழ் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஆசிய பிராந்திய கட்டளைத்தலைமையகமான ஹவாயிலிருந்து அமெரிக்க இராணுவ உயர்மட்டக் குழுவொன்று இலங்கை வந்திருப்பதாகவும், வன்னி மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து இவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படையினர் உட்பட வன்னி மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க இராணுவ உதவிகள் வழங்கப்படவிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வன்னியிலுள்ள மக்களை கடல்மார்க்கமாக வெளியேற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டு மனிதநேயப் படையணி மக்களை வெளியேற்றவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவும் அந்த ஊடகத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், எப்பொழுது இந்த மனிதநேய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பது பற்றித் தனக்குத் தெரியாதென அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கையில் இணைத்தலைமை நாடுகளைத் தனிப்பட்ட ரீதியில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் பேச்சுக்களை நடத்திவருவதாகவும், மக்களை வெளியேற்றுவதற்கு ஏனைய நட்புநாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் போகல்லாகம அந்த ஊடகத்திடம் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கைகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகளைப் பாதிக்காதவைகயில் அவர்களின் கொடியுடன் முன்னெடுக்கப்படும் என அந்த ஊடகத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்னியிலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கான உதவிகளை வழங்கத் தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சரும், பிரதமர் பதவியைத் தற்காலிகமாக வகித்து வருபவருமான பிரணாப் முஹர்ஜி சில தினங்களுக்கு முன்னர் இந்திய லோக்சபாவில் கூறியிருந்தார். இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டிருந்தது. வெளிநாடுகளின் மனிதநேய நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருந்தபோதும் எப்பொழுது மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவரவில்லையென அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments: