Saturday, March 7, 2009

காங்கிரஸுக்கு எதிராக ஆயத்தமாகும் சி.டி.-க்கள்!--ஈழ ஆதரவாளர்கள் அடுத்தகட்டம்...

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் குதித் தனவோ இல்லையோ... காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்தைக் கையில் எடுத்து விட்டார்கள் ஈழ ஆர்வலர்கள்.
'காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீங்க...' எனச் சொல்லி இளந்தமிழர் இயக்கம் கையெழுத்து வேட்டையில் இறங்க, இயக்குநர் சீமானின் ஆதரவாளர்களோ காங்கிரசுக்கு எதிராக காலில் விழும் போராட்டத்தில் குதித்திருக் கிறார்கள்.
இதற்கிடையில், பெரியார் திராவிடர் கழகத்தினர் காங்கிரசுக்கு எதிராக அதிரடியாக உருவாக்கி இருக்கும் சி.டி-க்கள் தமிழகம் முழுக்க விநியோகிக் கப்பட இருக்கின்றன. இது தெரிந்து அவற்றைத் தடைசெய்யக் கோரி முதல்வர் கருணாநிதியிடமே கோரிக்கை வைத்திருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
அப்படி அந்த சி.டி-யில் என்ன தான் இருக்கிறது? 'என் தாய்த் தமிழகமே...' என வருத்தம் தொனிக்கும் கனத்த குரலில் ஆரம்பிக்கிறது காட்சி... புலிகள் அமைப்பின் கலை, பண்பாட்டுக்குழு பொறுப்பாளரான 'புதுவை' ரத்தினதுரையின் கவிதை வரிகள் வாசிக்கப்பட, சிங்கள ராணுவம் குண்டு வீசுவதும், ஈழத் தமிழர்கள் அலறிப் புடைத்து ஓடுவதும், அடுத்தடுத்து காட்சிகளாக விரிகின்றன. கலிங்கத்து மண்ணாகக் கதறிக் கிடக்கும் ஈழத்தின் இன்றைய நிலைமை அப்படியே படம் பிடிக்கப்பட்டு, ரத்தமும் சதையுமாக மனதைக் கலங்கடிக்கின்றன. அதன் பிறகு தான் ஆரம்பிக்கிறது பிரசாரம்...
''இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் யார் காரணம்? கண்டனம் செய்தோம்... கண்ணீர் விட்டோம்... தீக் குளித்து மடிந்தோம்... ஆனாலும், தீர்ந்தனவா நம்
சோகங்கள்? நம் தமிழினத்தை அழிக்க, நம் தொப்புள் கொடியை அறுக்க ஆயுத உதவி செய்யும் காங்கிரஸ் அரசை எதிர்த்து என்ன செய்யப் போகிறோம்? வெற்றுக்கையால் என்ன செய்துவிட முடியும் என எண்ணி விடாதீர்கள். வாக்குச்சீட்டு எனும், வரலாற்றையே திருப்பும் ஒற்றை ஆயுதம் உங்கள் கையில் இருக்கிறது. மை தொடும் உங்கள் விரல் களில்தான் இருக்கிறது எல்லாம்...! அநாதைக் கூட்டமாகத் தமிழினத்தை அல்லாட வைக்கும் காங்கிரசுக்குத் தக்க பாடத்தைப் புகட்டுவோம். இன விடுதலையை எதிர்க்கும் துரோகி களைத் துரத்தி அடிப்போம்!'' எனத் தீப்பிழம்பு வார்த்தைகளாக நீள... அதற்குத் தக்கபடி காங்கிரஸ் தலைவியான சோனியா காந்தி, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் கைகுலுக்குவதும், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அதிகாரிகளோடு அளவளாவுவதும் படமாக்கப்பட்டி ருக்கின்றன. இறுதியாக ஈழப் பிரச்னைக்காகத் தீக்குளித்த முத்துக்குமாரின் படத்தையும் 'நான் உயிராயுதம் ஏந்தி யதைப் போல, இதை நகலாயுதமாகப் பயன்படுத்தி ஈழப் பிரச்னைக்காகப் போராடுங்கள்!' என்கிற வார்த் தைகளையும் சொல்லி முடித்திருக்கிறார்கள்.
இது குறித்து பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ''காங்கிரஸின் ஆசியோடுதான் ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்புப் போரை சிங்கள அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. அன்னை சோனியா என வாஞ்சையோடும் பாசத்தோடும் தமிழக மக்களால் அழைக்கப்படுபவரே, தமிழினத்தை அழிக்கும் கொடூரத்தைச் செய்கிறார். கணவரை இழந்தவர் என்பதற்காக, அவர் மீது தமிழக கிராம மக்கள் அன்பும் அனுதாபமும் பூண்டிருந்தனர். ஆனால், அவரோ தமிழ் மக்களை ரத்தச் சவங்களாக்கி, அதில் சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய மந்திரிமார்கள் சிங்கள அரசின் ஏவலாளிகள் போல் ஈழ மக்களை வேரறுக்கும் வேலைகளை முழுமூச்சில் செய்து கொண்டிருக்கிறார்கள். சோனியாவின் கபட நாடகத்தையும், காங்கிரஸ் கட்சியின் தமிழின துரோகத்தையும் குக்கிராம மக்கள் வரை கொண்டுபோவதற்காகத்தான் மொத்தத் துயரத்தையும் சி.டி-யாக்கி இருக்கிறோம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அதைக் காட்டி, வரும் தேர்தலில் காங்கிர சுக்கு எதிரான போரை நடத்துவோம். ஈழ மக்களை விரட்டத் துடிக்கும் காங்கிரஸை தமிழகத்தில் இருந்தே விரட்டுவோம்.
நாங்கள் மட்டுமல்லாது, ஈழ ஆர்வலர்கள் பலரும் சி.டி-க்களை நகலெடுத்து விநியோகிக்க இருக்கிறார்கள். ராஜீவ் காந்தி இறந்து கிடந்தது போன்ற படங்கள் 1991 சட்டமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட அனுதாபத்தை ஏற்படுத்தி, காங்கிரசுக்கு சாதகத்தை உண்டாக்கியதோ... அதற்கு நேர்மாறான விளைவை ஈழ மக்களின் சோகப்பதிவு இந்தத் தேர்தலில் உண்டாக்கும். இந்த விஷயங்களை முன்கூட்டியே கேள்விப்பட்டுத்தான், சி.டி. முயற்சியைத் தடுக்கும் விதமாக எங்கள் தலைவர் கொளத்தூர் மணியை சிறையில் தள்ளி இருக்கிறது அரசு. ஆனாலும், முழுமையான சி.டி-யை உருவாக்கி விட்டோம். அடுத்தபடியாக மொத்த தமிழகத்துக்கும், குறிப்பாக கிராமங்களுக்கும் அவற்றைக் கொண்டுசெல்வோம்!'' என்றார் கள் பெரியார் திராவிடம் கழக நிர்வாகிகள் சிலர்.
இந்த சி.டி. விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவிடம் கேட்டோம். ''காங்கிர சுக்கு எதிராக அவதூறு தகவல்களைப் பரப்பி சி.டி தயாரிக்கப்படுவது குறித்து இப்போதுதான் என் கவனத்துக்கு வந்திருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் வேண்டுமென்றே காங்கிரஸ் மீது பழி போடப்படுகிறது. மத்திய அரசு எடுக்கும் அக்கறையான முயற்சிகளை தமிழக மக்கள் அறிவார்கள். அன்னை சோனியா, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் சிவசங்கரமேனன் உள்ளிட்டோர் மூலமாக இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக்காக எல்லா விதத்திலும் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார். போர்நிறுத்தம் குறித்தும் காங்கிரஸ் அரசு இரு தரப்பையும் வற்புறுத்தி இருக்கிறது. அப்படியிருக்க, மக்களிடையே சிலர் செய்யும் போலிப் பிரசாரம் ஒருபோதும் எடுபடாது. காங்கிரஸ் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானத்தை சி.டி-க்கள் மூலமாக அழித்துவிட முயற்சிப்பது எடுபடாது. அந்த சி.டி-யை பார்த்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் பற்றி யார் அவதூறு பரப்பினாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடமும் வேண்டுவோம்!'' என்றார்.
91-ல் ராஜீவ் படுகொலையானபோதும் சரி... இப்போது ஈழத் தமிழர்கள் படுகொலையாகும்போதும் சரி... தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சூட்சுமக் கயிறாக இலங்கை இருப்பது விநோதமான ஒற்றுமைதான்!

0 comments: