Sunday, October 19, 2008

என்ன நடக்கிறது இலங்கையில்?

இலங்கை வன்னிப்பகுதியில் இதுநாள் வரை என்ன நடக்கிறதென்றே சரிவரத் தெரியாத நிலையில், இருட்டைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னல் கீற்றாக வெளியே வந்திருக்கிறது ஒரு சி.டி. வன்னிப் போர்க்களத்தில் சிக்கி தமிழ்மக்கள் அகதிகளாகப் படும்பாட்டை விளக்கும் அந்த சி.டி., கடல் கடந்து தமிழகக் கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த சி.டி. `சீறும் தலைவர்' ஒருவரிடம் சிக்க, அவர் கடந்த 13-ம்தேதியன்று முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து, அந்த சி.டி.யைக் கொடுத்திருக்கிறார். அடுத்தநாள் (14-ம்தேதிதான்) இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நிலையில் அந்த சி.டி.யை வீட்டில் போட்டுப் பார்த்திருக்கிறார் கலைஞர். கூடவே அவரது குடும்பத்தாரும்.முப்பத்திரண்டு நிமிடங்கள் ஓடக் கூடிய அக் குறுந்தகடு முடிவதற்கு முன்பாக கலைஞரின் முகத்தில் பலவித மாற்றங்கள். இடையிடையே கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தபடி இருந்திருக்கிறார் அவர். சி.டி. ஓடி முடிந்த பின்னர், கண்கள் குளமான நிலையில் நீண்டநேரம் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். அவரை தொந்தரவு செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.``இனி ஆட்சியென்ன வேண்டிக் கிடக்கு?'' என்று புலம்பியிருக்கிறார் கலைஞர். அதன் வெளிப்பாடுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், `இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட இரண்டுவார கெடுவும், தவறினால் தமிழக எம்.பி.க்கள் அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்யும் முடிவும்.'கலைஞரை ஆட்டி அசைத்துவிட்ட அந்தக் குறுந்தகடு, தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட முக்கியஸ்தர்களுக்குப் போய்ச் சேர இருக்கிறதாம். கலைஞரை மனம் குலைய வைத்த அந்தக் குறுந்தகட்டில் அப்படி என்னதான் இருந்தது என்று நாம் ஆராய முனைந்தோம். நீண்ட முயற்சிக்குப் பின் கிடைத்த அந்த சி.டி.யை லேப் டாப்பில் சுழல விட்டோம்....வன்னி நில வான்பரப்பு. இலங்கை விமானப்படையின் `கிபீர்' போர்விமானம் ஒன்று செங்குத்தாய் மேலே எழுகிறது. அதிலிருந்து மூன்று குண்டுகள் மண்ணை முத்தமிட விரைகின்றன. அதைப் பார்த்து பதறியபடி ஓடும் தமிழ் மக்கள் பதுங்கு குழிகளில் ஓடிப்போய் விழுகிறார்கள். இப்போது குண்டுகள் வெடித்து வானில் செம்மண் புழுதிப்படலம். அங்கங்கே அலறலும் கதறலுமான சத்தங்கள். அந்தப் பகுதி முழுக்க பற்றி எரிந்தபடி இருக்க, வீடுகள் பல தரைமட்டமாகிக் கிடக்கின்றன. பதுங்கு குழி ஒன்றில் வெள்ளை முயல்கள் போல பதுங்கிக்கிடந்த பள்ளிச்சிறுமிகள் சிலர் வெளியே வருகிறார்கள். ஒரு சிறுமி பித்துப் பிடித்தவள் போல வெளியே வர மறுத்துக் கதறுகிறாள். அவளை ஆசுவாசப்படுத்தி அழைத்து வருகிறார்கள் தோழிகள்.இதனிடையே குண்டுவீச்சு நடந்த இடம் முழுக்க சடலங்கள். பிணக்குவியல். ரத்தச் சகதியில் சிதைந்து கிடக்கிறார்கள் அப்பாவிப் பொதுமக்கள். உயிர் பிழைத்தவர்கள் ஓடிவந்து இறந்த உடல்களை ஏதோ விறகுக்கட்டைகளை ஏற்றுவதைப் போல ஒரு மினி லாரியில் ஏற்றுகிறார்கள். நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தேகம் முழுக்க ரத்தக்குளியலாய்‌க் கிடக்க, `தண்ணீர், தண்ணீர்' என்று கதறுகிறார். பார்க்கும் நம் மனம் உள்ளுக்குள் `ஓ'வென கதறுகிறது. வார்த்தைகள் எழ மறுக்கின்றன. கண்கள் கண்ணீரில் மூழ்குகின்றன.அடுத்ததாக ஒரு மருத்துவமனைக் காட்சி. ஸ்ட்ரெச்சர்களில் ஒவ்வொன்றாக சடலங்களைத் தூக்கிச் செல்கிறார்கள். மருத்துவ வளாகம் முழுக்க மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு `ஐயோ' என்று கதறுகிறார்கள்.ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகள் ரத்தம் தோய்ந்து கிடக்கிறார்கள். ஒரு குழந்தையின் ரத்தம் தோய்ந்த சட்டையைக் கழற்ற முடியாமல் கிழித்து எடுக்கிறார்கள். `இந்த குண்டடிக்காகவா பிறவி எடுத்தோம்?' என்பது மாதிரி பிரமை பிடித்த மாதிரி இருக்கின்றன அந்தக் குழந்தைகள். ``இங்கட மருந்து மாத்திரை கூட இல்லையே. டாக்டர்கள் வசதியும் இல்லையே'' என்று அருகில் கதறியபடி இருக்கிறார் ஒரு தாய்.மற்றொரு காட்சி. மரணத்தை எதிர்நோக்கியபடி படுக்கையில் படுத்திருக்கும் ஒரு சிறுவன் சிரித்தபடி கையை அசைக்கிறான். `என்னடா உங்கள் போர் தர்மம்?' என்று கேட்பது போல இருக்கிறது அவனது பார்வை.அதன்பின் வேறொரு காட்சி. தொடரும் சிங்கள குண்டுவீச்சுகளால் டிரக் வண்டிகளில் கூட்டம் கூட்டமாக கிளிநொச்சியை நோக்கி நகரும் தமிழ் மக்கள், வாகனத்தில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்களும் `ஒரு பொருளாக` பயணிக்கிறார்கள். அவர்களது வளர்ப்பு நாய்கள் ஒரு வண்டியில் வருகின்றன. அதற்குக் கூட வசதியில்லாத மற்ற நாய்கள் எஜமான விசுவாசத்தில் வாகனங்களைப் பின்தொடர்ந்து ஓடிவருகின்றன.வழியில் ஒருவரது டிரக் வண்டி (டயர்கள் பஞ்சர் போலும்) இரண்டு சக்கரங்களும் கழற்றப்பட்டு அப்படியே ரோட்டில் நிற்கிறது. அதில் வந்தவர்கள் பயணக் களைப்பால் மரநிழலில் படுத்துறங்க, அந்த சாலையில் அகதிகளின் வாகன வரிசை அணிஅணியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்த காட்சி. காடு, கழனி, சாலையோரங்களில் அகதி மக்கள் தொண்டுநிறுவனங்கள் தந்த தென்னை ஓலைக்கீற்றுகளால் குருவிக்கூடுகளைப் போல சிறுசிறு வீடுகளைக் கட்டும் முனைப்பில் இருக்கிறார்கள். அதற்கும் கூட வழியில்லாதவர்கள் துணிகளால் கூடாரம் அமைக்கிறார்கள். இடிந்து சிதறிக் கிடக்கும் வீடுகளிலிருந்து அட்டை, தகடுகளை எடுத்து வந்தும் `கூடு' கட்டுகிறார்கள். நேற்று வரை மாளிகை, மாடி வீடுகளில் தூங்கிய குழந்தைகள் இன்று மரங்களில் கட்டிய தூளிகளில் உறங்குகிறார்கள்.இன்னொரு காட்சி. பன்னாட்டுத் தொண்டு நிறுவன அதிகாரி ஒருவரைச் சூழ்ந்துகொண்டு கதறுகிறார்கள் தமிழ் அகதிகள். அவர்களை வெளியேறச் சொல்லிவிட்டதல்லவா சிங்கள அரசு? இனி அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வோம்? என்ற கவலை, பதற்றம் தமிழ் அகதிகளுக்கு.``கவலைப்படாதீர்கள். நாங்கள் மீண்டும் வருவோம். உதவிகள் செய்வோம்'' என்கிறார் அந்த வெள்ளை அதிகாரி. அடுத்த காட்சி. உணவுப் பொருள் ஏற்றிவந்த லாரிகள் வரிசையாக நிற்கின்றன. தடுப்பணையைத் தாண்டி வரும் அதிகாரியைப் பார்த்து அகதிகள் ஓவென அலறியபடி கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். பிறிதொரு காட்சியில் யூனிசெஃப் தொண்டு நிறுவன அலுவலக வாசலில் யாராவது வந்து உதவ மாட்டார்களா? என்று காத்துக் கிடக்கிறார்கள் அகதிகள். ஒருவேளை உணவுக்காவது வழி பிறக்காதா என்ற கவலை அவர்களுக்கு. அந்தக் காத்திருப்பில் காலம்தான் கரைகிறது. கடைசி வரை யாரும் வந்தபாடில்லை.இந்தக் குறுந்தகட்டில் இடையிடையே அகதிகள் பேசுகிறார்கள். ``ராணுவம் குண்டுவீச்சு நடத்துற தெல்லாம் எங்கட மேல்தான். ஏற்கெனவே யாழில் இருந்து வன்னிக்கு அகதியா வந்து நின்ன நாங்கள் இப்போ கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போறோம். இலங்கை அரசை நம்பி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போக முடியாது. போனால் சித்திரவதைப் படுவதோடு அங்கே போய் அடிமையாய்த்தான் நிற்கணும். அங்கே ஒட்டுக்குழு (கருணாபிரிவு) போராளிகள் எங்கட பிள்ளைகளை துப்பாக்கி முனையில் கடத்திப் போய்விடுவினம்'' என்கிறார்கள் அந்த மக்கள். வன்னிப்பகுதிக்குள் பள்ளிக்கூட வேன் ஒன்று சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. உபயம் சிங்கள விமானக் குண்டுவீச்சுதான். அந்த வேனுக்குள் உருக்குலைந்து கிடக்கும் பள்ளிச்சிறார்களை சிலர் அள்ளியெடுத்தபடி ஓடிவருகிறார்கள். இறந்து விட்ட சிறுமிகளைக் கீழே கிடத்திவிட்டு குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடப்பவர்களைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். யாருக்கும் கதறி அழக்கூட நேரமில்லை. இந்த அவலங்களைப் பார்க்கும் நம் கண்கள் குளமாகிப் போகின்றன. இதயத்தின் ஒரு மூலையில் `ஓ'வென்ற அழுகுரல் எதிரொலித்தபடியே இருக்கிறது.காட்சிகள் இருளாகி மறைகின்றன. `உலகத் தமிழினமே, எங்களுக்காகவும் பேசுங்களேன்' என்ற டைட்டில் விழுந்து நம்மை உலுக்கிப் போடுகிறது. ``எம் தாய்த் தமிழ் சொந்தங்களே. உங்கள் கைக் கெட்டும் தூரத்தில் அகதிகளாக நாங்கள். கைநீட்டும் தூரத்தில்தானே நிற்கிறோம். வாரி அணைத்துக் கொண்டால் போதுமே. ஓர் ஆதரவுக்குரல் எழுப்பினால் போதுமே. `இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் இன்னல் என்றால் தாய்த் தமிழகத்து உறவுகள் நான்குகோடி மக்களும் ஓடிவந்து நிற்போம்' என்று பேரறிஞர் அண்ணா சொன்னாரே'' என்ற குரல் பதிவுகள் நம் நெற்றிப் பொட்டில் சம்மட்டியாக விழுகின்றன.கடைசியாக முடியும்போது, `எம் தமிழினமே! தான் ஆடாவிட்டாலும், தம் சதை ஆட...' என்ற டைட்டிலோடு நிலைகுத்தி நின்று முடிகிறது. அலை அலையாய் அதிர்ச்சிகள் நம் நெஞ்சுக்குள் மோதிய படி இருக்கிறது நீண்ட நேரமாய்..தமிழக முதல்வர் கலைஞர், இந்த வயதிலும் இப்படியொரு காட்சியைப் பார்ப்பதற்கு என்ன மன உறுதியைப் பெற்றிருந்தாரோ?நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

0 comments: