Sunday, October 19, 2008

கருணாநிதியைச் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் தயாநிதி மாறன்!

முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து இன்று ராஜினாமா கடிதம் கொடுத்தார் தயாநிதி மாறன்.அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக தனது ராஜினாமா கடிதத்தை நேரில் ஒப்படைக்க தமக்கு நேரம் ஒதுக்கி தருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி இன்று முற்பகலில் அவருக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார் முதல்வர் கருணாநிதி.அவரை நேரில் சந்தித்து தனது கடிதத்தைச் சமர்ப்பித்தார் தயாநிதி மாறன்.திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன்.மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் அழகிரியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க திமுக பொதுக்குழு முடிவு செய்தது. ஆனால் அதற்குள்ளாகவே தயாநிதி மாறன் தனது மத்திய அமைச்சர் பதவியை தாமே முன்வந்து ராஜினாமா செய்தார்.ஆனாலும் திமுக எம்பியாகவே இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தயாநிதி.இந்த நிலையில், ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கடந்த 14ம் தேதி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இரு வார காலத்திற்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவை தொடர்ந்து திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பனர்களும் மத்திய அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை கருணாநிதியிடம் அளித்தனர்.இந்த நிலையில், தயாநிதி மாறன் பதவி விலகும் கடிதத்தை கருணாநிதியிடம் நேரில் ஒப்படைக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.உடனடியாக அவருக்கு நேரம் ஒதுக்கித் தரப்பட்டது.

0 comments: