Monday, October 20, 2008

ஈழப்பிரச்சினை அடுத்து என்ன?

ஈழத் தமிழர்கள் திட்டமிடப்பட்ட வகையில் சிங்களப் பேரினவாத அரசால் அழிக்கப்பட்டு வருவதை எதிர்த்து தமிழ்நாடே எரிமலையாகக் கொந்தளித்து எழுந்துவிட்டது. ஒவ்வொரு கட்சியும் அதனதன் பாணியில் போராட்டத்தை நடத்தி வருகின்றன.இராமேசுவரத்தில் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட அரங்கின் உரிமையாளர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் நேற்று மாலை ஒன்று கூடி இராமேசுவரத்தில் நடத்திய பேரணியும், எழுச்சிப் பொதுக்கூட்டமும் மகத்தானவைகளாக அமைந்துவிட்டன.போர்ப்பரணி என்று சொல்லும் அளவுக்கு அதன் எழுச்சி மண்ணையும், விண்ணையும் துழாவி நின்றுள்ளது. நடிகர், நடிகைகளும் அடுத்து தலைநகரில் தங்கள் பங்குக்கான எழுச்சியை வெளிப்படுத்த உள்ளனர்.இவற்றிற்குப் பிறகாவது இந்து, துக்ளக் பார்ப்பன வகையறாக்கள் - ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலோரிடம் ஆதரவு இல்லை என்று காட்ட முயலும் பித்தலாட்டத்தின் வாலைச் சுருட்டிக்கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கின்றோம்.ஏதோ அரசியல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகள் மேற் கொள்ளும் செயல்பாடுகள் என்று திசை திருப்பும் தில்லுமுல்லு தனத்தின் கடையைக் கட்டிக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.கருத்துரிமை என்ற பெயரால் தமிழர்களின் எழுச்சியைக் கொச்சைப்படுத்தினால், அவற்றை எதிர்க்கும் உரிமை என்ற பெயரால் தமிழர்கள் தங்கள் நடவடிக்கைகைகளைத் தொடரும் நிலை ஏற்படத்தானே செய்யும்.கொலைக் குற்றஞ் சுமத்தப்பட்ட சங்கராச்சாரியாரை ஆந்திரா வரை சென்று வரவேற்று தம் சொந்தக் காரில் அழைத்து வந்து, காஞ்சி மடத்தில் மரியாதையாக விட்டுச் செல்லும் இந்து ராம்கள், அழிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதை குறுகிய வாதம் (Chavinism) என்று சொல்வதுதான் வேடிக்கை! தான் திருடி பிறரைத் திருடி என்று சொல்லுவார் என்கிற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு நம்பிக்கையூட்டும் விளைவுகள் ஏற்பட்டுள்ளன.இலங்கைத் தூதரிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் பேசியதும், இலங்கை அதிபர் ராஜபக்சே அவசர அவசரமாக இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டதும், எந்த விலை கொடுத்தேனும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தமிழின மக்களுக்குத் தேவையான பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் இந்தியப் பிரதமர், இலங்கை அதிபரிடம் வலியுறுத்தியது எல்லாம் உலகத் தமிழர் மத்தியிலே நல்லதோர் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.அதேபோல, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அய்.நா. மன்றத்தின் சார்பில் 750 டன் உணவு வழங்கப்பட்டது என்பதும் ஆறுதல் அளிக்கும் தகவல்களாகும்.என்றாலும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் நிறுத் தப்படும் - நிறுத்தப்பட்டுவிட்டது என்று இலங்கை அதிபரிடமி ருந்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் கலைஞரிடம் தங்கள் பதவி விலகல் கடிதங்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். அனைத்துக்கட்சிக் கூட்டம் கொடுத்த கெடுவரை தமிழகம் காத்துக் கொண்டிருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இடையில் என்ன நடக்கப் போகிறது என்பதை உலக நாடுகளும் கவனித்துக் கொண்டுதானி ருக்கிறது.ஒரு சார்பாக யுத்த நிறுத்தத்தை விலக்கிக் கொண்டது இலங்கை அரசுதான். எனவே, அதுவே முன்வந்து போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளது.புத்திசாலித்தனமாக இலங்கை அரசு நடந்துகொள்ளத் தவறுமேயானால், விடுதலைப்புலிகளை அழிப்பது என்கிற பெயரால், ஈழத் தமிழர்களை முற்றாக அழிக்கும் தீயசெயல்கள் தொடருமேயானால், அடுத்து இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு என்ன என்பதுதான் முக்கியமான தாகும்.அகதிகள் பிரச்சினையைக் காட்டி வங்கத்தேசப் பிரச்சினையில் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய இந்தியா எப்படி நடந்துகொண்டது என்கிற முன்னுதாரணம் எல்லாம் ஏற்கெனவேயிருக்கிறது.உலக நாடுகளின் மத்தியில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் இனப் படுகொலையை (Genocide) எடுத்துச் சொல்லும் கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது.எல்லாவற்றிற்கும் இந்திய அரசு தயாராக இருக்கும் என்று நம்புவோமாக!

"விடுதலை" தலையங்கம் 20-10-2008

0 comments: