Monday, October 20, 2008

உண்ணாவிரதம்: எதற்குக் கூப்பிடுகிறீர்கள் ரஜினியை?

தமிழ் திரையுலகினர் நடத்தும் எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதில் தவறாமல் கேட்கப்படும் கேள்வி, ‘ரஜினி பங்கேற்பாரா?’
ஈழத் தமிழர் ஆதரவு எனும் உணர்ச்சிப் பூர்வமான போராட்டத்துக்கு திரையுலகினர் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் மட்டும் இந்தக் கேள்வி எழாமல் இருக்குமா?இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் என்ற குரல் எழத் தொடங்கிய உடனே இந்தக் கேள்வியும் மீடியாக்களால் உருவாக்கப்பட்டுவிட்டது.
ரஜினியை இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவராகச் சித்தரிக்க ஒரு கூட்டமே முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் ரஜினியின் நிலைப்பாடு தெளிவானது.
‘இலங்கையில் அவதிபடும் தமிழர்களுக்கு விரைவில் நிரந்தர அமைதி கிடைக்க வேண்டும். இலங்கையில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதே என் விருப்பம்…’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்ததை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அவரது இந்த பேட்டிக்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்துவிட்டன. இடையில் இலங்கைத் தமிழர் ஆதரவு என்று பேசினாலே பொடா பாயுமளவுக்கு மோசமான நிலையிருந்தது.இப்போதுதான் திடீரென்று மீண்டும் ஈழத்து மக்களுக்கான ஆதரவு பெருமளவு திரளத் தொடங்கியிருக்கிறது.
இப்போது இந்த பேராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள ரஜினி, உண்ணாவிரதத்தில் பங்கேற்கப்போவதாகவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களுக்கு ரஜினியை அழைப்பதெல்லாம் சரிதான்.அங்கே ரஜினியைப் பார்த்த பிறகுதான் இவர்களின் தமிழுணர்வு பீறிட்டுக் கிளம்பும். வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறத் தொடங்குவார்கள்.
அவரும் ஒரு தமிழர் என்று சொல்லித்தானே அழைக்கிறார்கள்… அவர் மேடைக்கு வந்ததும் எழும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பான வரவேற்பையும் கைத்தட்டலையும் பார்த்த பிறகுதான் இவர்களுக்கு, அடடா இவர் பக்கத்து மாநிலத்துக்காரராச்சே, இவ்வளவு தமிழர்களுடைய ஆதரவும் இவருக்கு மட்டுமேவா… என்ற பொறாமை எட்டிப் பார்க்கும்.
அப்போதே விஷமத்தனத்தை ஆரம்பித்துவிடுவார்கள். மேடை நாகரீகமாவது, மண்ணாவது… பேயாட்டம்தான்!
அப்படியெல்லாம் இந்த முறை நடக்காமல் பார்த்துக் கொண்டால்தான் இந்த உண்ணாவிரதத்துக்கு மரியாதை.
காரணம் ரஜினிக்கு நேரும் அவமானம், ஈழத் தமிழனுக்கு ஆதரவு தரும் ஒவ்வொரு தமிழனுக்கும் நேரும் அவமானமாகவே கருதப்படும்!
ரஜினியை உயர்த்தி வைத்துப் பார்க்க இப்படி எழுதவில்லை. அவரது உயரம் உலகமறிந்தது.ரஜினியை எதற்கு இந்த மாதிரி போராட்டத்துக்கு அழைக்கிறார்கள்… ரஜினி வந்து பேசினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றா… இல்லை. உலகத்தின் கவன ஈர்ப்பைப் பெறுவதற்காகத்தான்.
ஆனால் நடப்பது என்ன?
இவர்ள் அழைப்பை பெரிதாய் மதித்து ரஜினி வருவார்… மேடையில் உள்ள துண்டு துக்கடாவுக்குக் கூட மரியாதை செலுத்துவார் (அது அவர் பண்பு!)… உலகின் கவனமே அவர் பக்கம் திரும்பும். அவ்வளவுதான்… இங்குள்ள சத்யராஜுக்கும், சரத்குமாருக்கும், இவர்களுக்கும் கீழ் மட்டத்திலுள்ள நடிகர்களுக்கும் அடிவயிறு பற்றிக் கொண்டு எரியும் பொறாமையில்.
ரஜினியை இவர்கள் வருந்தி வருந்தி அழைக்கும் ஒவ்வொரு போராட்டமும் இப்படித்தான் முடிந்திருக்கிறது.
இந்த முறை ஈழத் தமிழனுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டும் முன் உங்கள் மனதிலுள்ள பொறாமை அழுக்கை கழுவிவிட்டு ஒன்றுபடுங்கள்… உங்கள் குரல் தூர்ந்து கிடக்கும் உலகின் செவிகளைக் கிழிக்கும்!

0 comments: