ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்திய அரசு தலையிடவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் 27 கட்சிகள் ஒன்றிணைந்து - 6 கோரிக்கைகளை 6 தீர்மானங்களாக இயற்றி மத்திய அரசின் அவசரப் பரிசீலனைக்கு முன் வைத்துள்ளன. இந்த ஆறு கோரிக்கைகளில் எந்த ஒரு கோரிக்கையும் இலங்கை அரசின் இறையாண்மைக்கு விரோதமானவை என்று மனச்சாட்சியுள்ளவர்கள் எவரும் கூறமாட்டார்கள். 1. இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு - சகவாழ்வு திரும்பிட இந்தியப் பேரரசு உடனடி நடவடிக்கை எடுத்திடுக - என்று கோருவதில் இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமானது என்ன இருக்கிறது? 2. இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி வழங்கி வருவதை உடனடியாக நிறுத்திடவேண்டும் என்று கோருவதில் இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமானது என்ன இருக்கிறது? 3. போர் நிறுத்தம் செய்யப்பட்டு - பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு, உறையுள், மருந்துகளை மத்திய அரசு வழங்குக - என்று கோருவதால் இலங்கை இறையாண்மைக்கு என்ன பாதகம்? 4. தொண்டு நிறுவனங்களின் உதவிகளை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் நேரடியாக வழங்கிட மத்திய அரசு முன்வருக - என்று கோருவது எந்த விதத்தில் இலங்கையின் இறையாண்மையை பாதித்துவிடும்? 5. தமிழக மீனவர்களைக் கண்மூடித்தன மாகத் தாக்கும் இலங்கைக் கடற்படையினரின் செயலுக்கு நிரந்தரத் தீர்வு காண்க - என்று கோருவது எந்த வகையில் இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமானது? 6. இலங்கையில் இரண்டு வாரகாலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வரா விட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும். - என்று கூறுவதில் இலங்கையின் இறையாண்மைக்கு என்ன பங்கம் ஏற்பட்டுவிடும்? ஈ.ழத்தமிழர் பிரச்சினைக்காகத் தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதிலும் இலங்கை அரசின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் எந்த அம்சமும் எள்முனையளவும் கிடையாது என்பது மட்டுமல்ல; கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களில் எவரது பேச்சிலும் இலங்கையின் இறையாண் மைக்கு சவால்விடும் விதத்தில் ஒருவரி கூட இருக்கவில்லை. இந்நிலையில் - பார்ப்பனர்களான ‘இந்து’ ஏட்டின் மாலினி பார்த்தசாரதியும் - சுப்பிரமணியசாமியும், துக்ளக் சோவும் ஈ.ழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று இந்திய அரசிடம் கோரிக்கை வைப்பவர்களை தமிழ் இனவெறியர்கள், குறுமதிக் கொள்கையாளர் என்றெல்லாம் இழிவுபடுத்தி - எரிச்சலும் துவேஷமும் பொங்கிட தாக்குதல் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள்! இப்படியெல்லாம் இவர்களை எழுத வைப்பது எது? இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள், தமிழ்நாட்டிலேயே வசிப்பவர்கள், தமிழ்நாட்டிலேயே பிழைப்பு நடத்துபவர்கள் என்றாலும் இவர்கள் ஒருபோதும் தமிழர்கள் அல்ல! இவர்கள் தங்களை ஆரியர்கள் வழிவந்த பிராமணர்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுபவர்கள். - பிராமணரல்லாதார் கோயிலுக்குள் நுழையக்கூடாது. - கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது. சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை நடத்தப்படல் வேண்டும். - கடவுள் சிலை இருக்கும் கருவறைக்குள் நுழையும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு. - கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யவும் - அர்ச்சனை செய்யவும் பிராமணர் களுக்கு மட்டுமே உரிமையுண்டு. - நடராஜரின் சந்நிதியில் - திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் - தேவாரம் திருவாசகம் பாடக்கூட உரிமை கிடையாது. - என்று பிராமண வெறி தலைக்கேறிட - பிராமணரல்லாத மக்களை அவமதித்து வருபவர்கள். அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்கு வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால் குடம் குடமாய்க் கண்ணீர் வடிப்பார்கள்! காரணம் என்ன? அமெரிக்காவாழ் இந்தியர்கள் - அமெரிக்காவில் உத்தியோகம் பார்க்கும் இந்தியர்கள் என்றால் அவர்களெல்லாம் யார்? பெரும்பாலும் பார்ப்பனர்களே! ஆகவே, அமெரிக்காவாழ் ‘இந்தியர்’களுக்கு வேலைபோய்விடும் என்றாலே அலறுவார்கள், கதறுவார்கள், கண்ணீர் வடிப்பார்கள். ஆனால் - ஈ.ழத்தமிழர்கள் 20 லட்சம் பேர் - இலங்கை ராணுவத்தினால் பதறப் பதறப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; பல லட்சம் பேர் வீடு வாசல்களை இழந்து இலங்கையில் - சொந்த நாட்டிலேயே - உடைமைகளையும் உரிமை களையும் இழந்து தவிக்கிறார்கள் என்பதோடு - தாய்த்தமிழ் மண்ணிலும் ஆண்டு பலவாக அகதிகள் முகாம்களில் வசித்து வருகிறார்கள். இவர்கள் மட்டுமல்ல; தமிழக மீனவர்களையே 400க்கும் மேற்பட்டவர்களை இலங்கை ராணுவ வெறியர்கள், சுட்டுத்தள்ளித் தங்கள் இனவெறிக்கு பலியிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தமிழர்களை அப்பாவித் தமிழர்களை இலங்கை இன வெறி ராணுவத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுங்கள் என்று - இந்திய அரசிடம் - தாய்த் தமிழகத்தின் முதல்வரும் - அரசியல் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தால் - கோரிக்கைகள் வைத்தால் தமிழ் இனவெறி குறுமதிக் கொள்கை என்று பார்ப்பனர்கள் படபடக்கிறார்கள். இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ‘ஜனசக்தி’ நாளிதழில் ‘குருதிப்புனலும் குள்ள நரிகளும்’ என்ற தலைப்பிட்டு ஒரு சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார். அதன் சில பகுதிகள் வருமாறு:- அக்டோபர் பதின்மூன்றாம் நாளன்று வெளியான இந்து நாளேட்டில் மாலினி பார்த்தசாரதி, தமிழ் இனவெறி - குறுமதிக் கொள்கையாளர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவருக்கு பதினான்காம் நாளன்று தமிழக அரசு கூட்டிய சர்வ கட்சிக் கூட்டம் நடைபெறுவது தெரிந்தே எழுதியுள்ளார். அவரது கருத்தை ஆதரித்து 15-ம் நாள் வெளியான இந்துவில் பல கடிதங்கள். மறுத்துக் கூறப்பட்ட ஓரிரு கடிதங்களில் சில வரிகள். இந்தியன் எக்ஸ்பிரசில் சுப்பிரமணியசாமி கட்டுரை... இவர்களை யார் என நமக்கும் புரிகிறது. நம்மைத் தான் அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. இட்டுக்கட்டிப் பொய்களை விதைக்க அவர் களுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், மெய்மையே வெல்லும் என்பதில் நமக்கு நம்பிக்கையுண்டு. இந்தியாவில் சாதிப்படி வரிசை முறை பல்லாண்டுகளாக இருக்கிறது. எனவே, இங்கேயே பிறந்து வாழ்ந்தாலும், தங்களுக் கென்று தனி அக்கிரகாரம் கட்டி ஒதுங்கி வாழ்ந்த வர்கள், இந்த மண்ணில் பிறந்த மைந்தர்களுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் சேரிகள் கட்டி, சேற்றுக்குள் தள்ளியவர்களின் சிந்தனை, இன்றைக்கும் ஒரு தனித் தீவு கட்டி, ஒரு சிந்தனை வட்டத்திற்குள்தான் சிலர் வாழ்கின்றனர். இவர்களால், தமிழ் மண்ணோடும், மக்களோடும் கலக்க முடியவில்லை. மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிவது இல்லை. எனவேதான், மொழி வெறியர்களாக இனக் குறுமதியாளர்களாக தமிழ்நாட்டுக் கட்சிகளை வருணிக்க முடிகிறது. தமிழக அரசு கூட்டிய கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தை ஆளும் பொறுப்பிலுள்ள தி.மு.க.வும் கலந்து கொண்டது. ஆனால் மாலினியும், சுப்பிரமணியசாமியும் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளைப் போலவும், கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் குறுமதியாளர்களாகவும், சிறுபான்மை மக்களின் வெறிக்குரல் என்றும் எழுத முடிந்தது எப்படியோ தெரியவில்லை. சரி, இனவெறி, மொழிவெறி, குறுமதிக் கொள்கை படைத்தோர் நிறைவேற்றிய தீர்மானத்தையாவது படித்தீர்களா? இலங்கை வாழ் தமிழ்மக்கள் இலங்கைக் குடிமக்கள், மனிதர்கள். அவர்களை இலங்கை அரசு விமானக் குண்டுவீச்சு மூலமும், தரைப்படையில் கொத்துக் குண்டு வீச்சு மூலமும் நிரபராதி மக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும். மக்களுக்கு எதிரான போரை நிறுத்துக என்பது வேண்டுகோள். அதையும் நாங்கள் இந்தியக் குடிமக்களாக இருப்பதால் எங்களது இந்திய அரசிடம், இலங்கை அரசிடம் வற்புறுத்த வேண்டினோம். இதிலே எது இன, மொழிவெறி, குறுமதி? மனிதர்களைக் கொல்லாதே என்று வேண்டுகிற போது, கொல்பவர்கள் யாராக இருப்பினும் கொலைச் செயலை நிறுத்து என்றுதானே பொருள். தமிழ் கூடப் புரியாத உங்களிடம் வாதிடுவது சிரமம்தான். எங்கள் அல்லது நமது இந்திய அரசிடம் இலங்கை அரசு, சொந்தக் குடிமக்களைக் கொன்றழிக்க முற்பட்டுள்ள மூர்க்கத்தனமான போருக்கு இந்தியாவிலிருந்து படைவீரர்கள், ஆயுதங்கள், போர்க்கருவிகளை அனுப்ப வேண்டாம் எனக் கேட்கிறோம். இந்தியத் துப்பாக்கியால் இந்திய ராணுவ வீரன் சுட்டதால் இலங்கைத் தமிழர் கொல்லப்படு கிறார்கள் என்ற பழி வேண்டாம் என்பது, இனவெறியா? தர்மப் பிச்சை கேட்கும் கோரிக்கையா? இதுபற்றி இலங்கை ராணுவத் தளபதி வெளியிட்ட கருத்தை மட்டும் படிக்கவே மாட்டீர்களா? இலங்கை சிங்கள மக்களின் நாடு எனப் பிரகடனம் செய்துள்ளதையும் படித்துள் ளீர்களா? இல்லையா? விமான, ராணுவத் தாக்குதலால் வீடிழந்து, உயிரைக் காத்துக் கொள்ள குழந்தைகளுடன் தாய்மார் கொட்டும் மழை வாட்டுகிற காட்டுக்குள் ஓடித் தஞ்சம் புகுந்துள்ள செய்தி கேட்டு பசிக்கு உணவும், நோய்க்கு மருந்தும் காந்திபிறந்த நாடு அனுப்பி உதவ வேண்டும் என்று கேட்பது தமிழ் சாவினிசமா? சாகட்டும் என விட்டுத் தொலைக்கக் கூடிய பிசாசு புத்தியா? மனிதாபிமானம் கூட இல்லாத அளவிற்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதலாமா? கொல்வதை நிறுத்துக என்பார் குறுமதியாளர் என்றால் குருதிப்புனல் கண்டும், சூத்திரம் படைப்போர் குள்ள நரிகளாகத்தான் இருக்க வேண்டும். இவ்வளவு மனக் குமுறலையும் தாங்கி வாழும் நாங்கள் என்றாவது நிதானமிழந்து இலங்கையின் மீது படையெடுப்போம், சிங்கள இனத்தை அழிப்போம், இந்தியப் படையை ஏவுக- என்று எப்பொழுதாவது பேசினோமா? சர்வகட்சிக் கூட்டத்தில் ஒருவராவது சிங்களர் களை ஒழிப்போம் என ஒரு சொல் கூறப்பட்டதா? இனவெறியர்களாக இருந்திருந்தால் சிங்களர்களுக்கு எதிரான முழக்கம் வர வேண்டும். இலங்கைத் தமிழர் இலங்கையின் உள்நாட்டு சொந்த வீட்டுவிவகாரம் என்றால், தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியக் கடலில் இலங்கைக் கப்பற்படை சுட்டு நானூறு தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டதும் சொந்த வீட்டுப் பிரச்சினையா? தமிழக மீனவன், இந்தியக் குடிமகனா? இல்லையா? அவனது உயிரை, தொழில் உரிமையை பாதுகாக்க என்னிடம் வரிவாங்கும், என் வாக்கைப் பெற்று அமைந்துள்ள இந்திய அரசுக்கு பொறுப்பு உண்டா? இல்லையா? எனவே சாதிக்கொரு நீதி கூறாதீர்கள். தமிழ் மக்கள், இந்தப் பூப்பந்தில் எங்காறும் தடியடிபட்டும், கசையடியுண்டும் செத்து மடிவது ஏன்? விதியே விதியே தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாய்? என்று எழுதிய பாரதியார், குறுமதியாளர் என்றால் நாங்களும் அங்குதான் நிற்க விரும்புகிறோம். கொட்டி ஓடும் ரத்த ருசி பார்க்க நீட்டும் குள்ள நரிகளின் நாக்கை ஏன் தொங்கப் போடுகிறது என்பதை அறிவோம். - என்று உலக முழுவதும் ஈழத்தமிழர்களின் நல்வாழ்வை இறைஞ்சிடும் கோடானு கோடித் தமிழர்கள் - பிராமணரல்லாத பெருமக்களின் உள்ளக் குமுறல்களுக்கு - கோரிக்கைகளுக்கு கட்டுரை வடிவம் தந்திருக்கிறார் தா.பாண்டியன். சரி; தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொல்லப்படும் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தால் அது தமிழ் இனவெறி என்று சென்னை வாழ் அறிவு ஜீவி அய்யங்கார் அம்மையார் கண்டிக்கிறார்; கனல் கக்குகிறார். ஆனால் இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் கஷ்டப்படுவதற்கு காரணம் அரசியல்வாதிகள்தான். அரசியல்வாதிகளிடமிருந்து இந்திய மக்களைக் காப்பாற்றுங்கள் - என்று இந்திய ஜனாதிபதியிடம் பலமுறை கோரிக்கை வைத்தேன், அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால்தான் நடவடிக்கை எடுக்காத ஜனாதிபதியையே - பிரதிபா பாட்டிலையே கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்தேன் - என்று போலீசாரிடம் சிக்கிக்கொண்ட ஸ்ரீரங்கத்து இன்ஜினியர் அய்யங்கார் ஒருவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். "நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மக்கள் அச்சவுணர்வோடு வாழவேண்டியுள்ளது. மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீர், மின்சாரம் போன்றவற்றை ஆட்சியாளர்களால் கொடுக்க முடியவில்லை. இதற்கு அரசியல்வாதிகள்தான் காரணம். அரசியல் வாதிகளுக்கெல்லாம் தலைவராக இருப்பவர் ஜனாதிபதிதான். ஜனாதிபதி கண்டிப்பானவராக இருந்தால் அரசியல்வாதிகளைத் திருத்த முடியும். இதனால்தான் ஜனாதிபதிக்குக் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பினேன்" - என்கிறார் ஸ்ரீரங்கத்து அய்யங்கார்! ------------------ஸ்ரீரங்கத்து அய்யங்கார் ஸ்ரீராமும் - சென்னை வாழ் அய்யங்கார் அம்மையாரைப் போல வசதி படைத்தவர்தான். கம்ப்யூட்டர் இன்ஜினீயர் . அதுவும் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறவர்! இந்திய மக்களைப் பாதுகாக்கவில்லையே என்ற ஆதங்கம், ஆத்திரம் ஒரு அய்யங்காருக்கு ஏற்பட்டால் - அதற்கு சரியான தீர்வு இந்திய ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல்கள் விடுவதுதான் என்று நினைத்து ஒருமுறை - இருமுறையல்ல 16 முறைகளுக்குமேல் குடியரசுத் தலைவருக்கு ஈமெயில் மூலம் கொலை மிரட்டல்களை விடுத்திருக்கிறார் அவர்! அது ஸ்ரீரங்கத்து அய்யங்கார் கடைப்பிடித்த (மனு) தர்மசாஸ்திரம்! "ஈ.ழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்" என்று மத்திய அரசிடம் தமிழகத் தலைவர்கள் கோரிக்கை வைத்தால் அது தமிழ் இனவெறி என்கிறார் சென்னை வாழ் அய்யங்கார் அம்மையார். எது எப்படி இருப்பினும் ‘அவாள் நினைத்தால் கொல்வேன்’ என்றும் மிரட்டுவார்கள்! "கொல்லாமல் காப்பாற்றுங்கள்" என்று கோரிக்கை வைப்பவர்களை - குறுமதியாளர் - தமிழ் இனவெறியர் என்றும் சாடுவார்கள். இதுவெல்லாம அவர்களது பிறவிச் சுபாவம்; சாதிப்புத்தி என்பதல்லால் வேறு என்ன?
நன்றி: "முரசொலி" இணையதளம்
Monday, October 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment