Sunday, January 4, 2009

2008-படங்கள்: ஒரு ப்ளாஷ்பேக்!

இங்கே நாம் போட்டிருக்கும் பட்டியல் கடந்த ஆண்டின் மறக்க முடியாத வெற்றி, தோல்வி மற்றும் ஏமாற்றங்களைத் தந்த 10 படங்கள்...
1.தசாவதாரம்
கே.எஸ். ரவிக்குமார்தான் இயக்குநர் என்றாலும், தசாவதாரம் ஒரு கமல் படம் என்பது படம் முழுக்கத் தெரிந்தது. திரைமுழுக்க கமல் ஆக்கிரமிப்புதான். அறிவுஜீவி கமல் காணாமல் போய், மாஸ் ஹீரோ கமல் வெளிப்பட்டிருந்ததில் அவரது ரசிகர்களுக்கே கூட ஏக சந்தோஷம்.
கமலும் வெற்றிக்கான பாராமுலாவை தெளிவாகத் தெரிந்து கொள்ள இந்தப் படம் உதவியது. பலவித விமர்சனங்கள் இருந்தாலும், 2008ம் ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படம் தசாவதாரம் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாடுகளில் கடந்த ஆண்டு அதிக வசூலைப் பெற்ற படங்களில் முதலிடமும் தசாவதாரத்துக்கே. தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தனது பேனரை இழந்தாலும், அவரது பேங்க் பேலன்ஸை இழக்காமல் காப்பாற்றிவிட்டார் கமல்.

2.குசேலன்
சென்ற ஆண்டு எல்லாருக்குமே அதிர்ச்சி தந்தது குசேலன் படத்தின் தோல்வி. இந்தப் படத்தின் நாயகன் ரஜினிகாந்த் இல்லை என்பதை மறைத்ததோடு, ரஜினி சொன்னதையும் மீறி படத்தை அநியாய விலைக்கு விற்றார்கள் தயாரிப்பாளர்களான கவிதாலயாவும் செவன் ஆர்ட்ஸூம்.
அத்தோடு ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக எழுந்த வதந்தி, பின்னர் அவர் 'மன்னிப்புக் கேட்கவில்லை, வருத்தம்தான் தெரிவித்தேன்' என்று சொன்னதைக் கூட எடுபடாமல் செய்துவிட்டது.
அதைவிட முக்கியம், இந்தப் படத்தை சென்னையில் மட்டும் 20 திரையரங்குகளில் திரையிட்டது. 'குறைந்த லாபம் வைத்து விற்றுக் கொள்ளுங்கள், சென்னையில் 5 தியேட்டர்களில் மட்டும் வெலியிடுங்கள்' என ரஜினி சொன்னதைக் கூட புறந்தள்ளிவிட்ட இவர்கள் பேராசைக்குக் கிடைத்த சவுக்கடியாக அமைந்தது குசேலன் தோல்வி.
3.சுப்பிரமணியபுரம்
சின்ன பட்ஜெட், எளிய கதை மாந்தர்கள், நாம் எப்போதோ பக்கத்திலிருந்து பார்த்த சம்பவங்களையே திரைக்கதையாக்கிய விதம்... இதுதான் சுப்பிரமணியபுரத்தின் மாபெரும் வெற்றிக்கான காரணங்கள்.
சொல்லப்போனால் இந்தப் படத்தைத்தான் கடந்த ஆண்டின் மிகச் சிறந்த வெற்றிப் படமாக குறிப்பிட வேண்டும். இந்தப் படம் மூலம் வினியோகஸ்தர்களுக்குக் கிடைத்த லாபம் கிட்டத்தட்ட 400 சதவிகிதம்!!
இந்தப் படம் மூலம் கவனிக்கப்படும் படைப்பாளிகளுள் ஒருவராக, மணிரத்னம் போன்றவர்கள் தேடி வந்து பாராட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டார் இயக்குனர் சசி. நேர்மையான உழைப்புக்குக் கிடைத்த மரியாதை அது.
4. ஏகன்
ஐங்கரன் பேனரில் வந்த முதல்படம். கலகலப்பான படமாக இருந்தாலும், அஜீத் ரசிகர்களுக்கே பிடிக்காத படமாகிவிட்டது ஏகன். ஒருவேளை படத்தில் தன்னைப் பற்றிய விமர்சனங்களை தானே அஜீத் சொல்வதுபோல வரும் காட்சிகள் பிடிக்கவில்லை போலிருக்கிறது.
ஏற்கெனவே சில படங்களின் விநியோகத்தில் ஏற்பட்ட நஷ்டத்துடன், ஏகன் படத்தில்பட்ட அடியும் சேர்ந்து அவர்களை எழமுடியாத அளவுக்குச் செய்துவிட, இப்போது மீண்டும் துவங்கிய இடத்தில் போய் நிற்கிறது ஐங்கரன்!
5. குருவி
இந்தப் படம் ஒரு வெற்றிப் படம் என விஜய் தரப்பு கூறிக் கொண்டாலும், ரசிகர்களின் நம்பிக்கைக்கு கிடைத்த அடி என்று சொல்வதே சாலப் பொருந்தும்.
கில்லி என்ற நல்ல கமர்ஷியல் பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்த தரணியும், இளைஞர்களின் நம்பிக்கை நாயகர்களின் ஒருவரான விஜய்யும் கொஞ்சமும் லாஜிக் இல்லாத இப்படியொரு படத்தைக் கொடுப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
6. அஞ்சாதே
தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களுள் ஒன்று அஞ்சாதே. சிறந்த திரைக்கதை மற்றும் மிகைப்படுத்தல் இல்லாத இயக்கத்துக்கு சிறந்த உதாரணம் அஞ்சாதே.
மிஷ்கின் என்ற படைப்பாளிக்குள் இன்னும் பல வண்ணங்கள் புதைந்து கிடப்பதையும், நல்ல ரசிப்புத் தன்மை எனும் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அந்த வண்ணங்கள் தமிழ் சினிமாவையே கலர்புல்லாக்கும் என்ற நம்பிக்கையையும் விதைத்த நல்ல படம். தரத்தில் மட்டுமல்ல... வணிக ரீதியாகவும் இந்தப் படம் பெற்ற வெற்றி தமிழ் ரசிகர்களின் நல்ல ரசனைக்கு சான்று.
7. காதலில் விழுந்தேன்
நல்ல படமாக இருக்கும்... ஆனால் போதிய விளம்பரம் இல்லாமல் துவண்டு போய் தோல்விப் பட்டியலில் சேர்ந்துவிடும். தமிழ் சினிமாவில் இன்று நேற்றல்ல... ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் முக்கிய குறைபாடு இது.
சரியான நேரத்தில் சன் பிக்சர்ஸ் அந்தக் குறையைக் களைய முன்வந்தது. அந்த முயற்சியின் விளைவுதான், தயாராகி பல மாதங்கள் பெட்டியில் தூங்கிக் கிடந்த காதலில் விழுந்தேனை வாங்கி திரையிட வைத்தது. மார்க்கெட் உள்ள நடிகர்களோ இயக்குநரோ இந்தப் படத்தில் இல்லைதான். ஆனால் நினைத்தால் ஒரு மார்க்கெட்டையே உருவாக்கும் ஆற்றல் படைத்த சன் நிறுவனத்தின் கைக்குப் போன பிறகு, காதலில் விழுந்தேன், ஒரு சூப்பர் ஸ்டார் பட ரேஞ்சுக்கு பேசப்பட்டது. தமிழ் சினிமாவின் கடந்த ஆண்டு சாதனைகளுள் ஒன்று இந்தப் படம் பெற்ற வெற்றி.
8. அபியும் நானும்
சில மிகைப்படுத்தல் இருந்தாலும், அபியும் நானும் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத, மறுக்க முடியாத நல்ல திரை முயற்சி.
நல்ல சினிமா வரவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதில் என்ன லாபம்? பிரகாஷ் ராஜ் மாதிரி துணிந்து சில நல்ல முயற்சிகளைச் செய்து பார்த்தால்தானே, ரசனையின் அளவுகோலைத் தெரிந்து கொள்ள முடியும். இந்தப் படம் சி சென்டர்களில் இப்போதைக்கு எடுபடாமல் கூடப் போகலாம்.
ஆனால் இளைஞர்கள், சக கலைஞர்களுக்கே கூட, இந்த மாதிரி நல்ல முயற்சியில் நாமும் இறங்கலாமே என்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது நிஜம்.
9.சந்தோஷ் சுப்பிரமணியன்
'ஃபீல் குட்', 'க்ளீன் எண்டர்டெய்ன்மென்ட்' போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் படம். அருமையான படைப்பு. வணிக ரீதியாகவும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களைத் திருப்திப்படுத்திய படம் இது. எந்த வித தூண்டுதலும் இல்லாமலேயே தியேட்டர்காரர்கள் சந்தோஷமாக 100 நாட்கள் ஓட்டிய வெகு அரிதான படங்களில் ஒன்று. ஜெயம் ரவி என்ற இளைஞரால் எந்த மாதிரி வேடங்களையும் அநாயாசமாக செய்ய முடியும் என நிரூபித்த படம் இது.
10. பூ
ஒரு தமிழ் நாவலின் அழகு கொஞ்சமும் கெடாமல் ஒரு திரைப்படத்தைத் தர முடியும் என இந்தப் படத்திலும் நிரூபித்திருந்தார் சசி. பார்வதி என்ற நல்ல நடிகையை இந்தப் படம் மூலம் தந்தார். வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தமிழ் சினிமாவின் தரத்தை இன்னும் ஒரு எட்டு முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாகவே இந்தப் படத்தை நாம் பார்க்கிறோம்.
இன்னும் கூட சில நல்ல படங்கள் இந்த ஆண்டில் வெளியாகின. சத்யம் போன்ற பெரும் ஏமாற்றங்களும் இந்த ஆண்டில் கிடைத்தன. இந்த வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் தொழில் நேர்மை, அக்கறையின்மை அல்லது அலட்சியம்தான். இந்தப் பாடிப்பினைதான் நம் படைப்பாளிகள் கற்றுக் கொள்ள வேண்டியது!

0 comments: