Friday, January 30, 2009

முத்துக்குமாரின் பாட்டி கதறல்

திருமணத்திற்கு பெண் பார்த்து வைத்திருந்தேன்.. அதற்குள் என் பேரன் போய் விட்டானே என்று இலங்கை தமிழருக்காக தீக்குளித்து உயிர்விட்ட பத்திரிக்கை ஊழியர் முத்துக்குமாரின் பாட்டி கண்ணீர் விட்டபடி கூறினார்.இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம், நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரியும், இலங்கை தமிழர்களை காப்பாற்ற கோரியும் சென்னையில் நேற்று வாலிபர் முத்துகுமார் தீக்குளித்து உயிர் விட்டார்.இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்துர் அருகேயுள்ள கொழுவைநல்லூர் கிராமம் ஆகும். தந்தை பெயர் குமரேசன் என்ற மகாராசன். முத்துகுமாரின் தாய் சித்திரை கனி இறந்துவிட்டார். முத்துகுமாரின் தம்பி வசந்த்குமார் விபத்தில் பலியாகிவிட்டார். சகோதரி தமிழரசிக்கு திருமணம் ஆகிவிட்டது. முத்துகுமாரின் பெற்றொர் 15 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினர்.முத்துகுமாரின் பாட்டி லிங்கபுஷ்பம் அம்மாள் மட்டும் சொந்த ஊரான கொழுவை நல்லூரில் வசித்து வருகிறார்.முத்துக்குமாரின் தியாகம் குறித்து அவர் கண்ணீர் விட்டபடி அவர் கூறுகையில், என் பேரன் முத்துகுமார் படிப்பில் கெட்டிக்காரன். அவர் மரந்தலை உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்தான். படிப்பில் சிறந்து விளங்கியதற்கு பரிசுகள் வாங்கியுள்ளான்.என் பேரனுக்கு திருமணம் நடத்துவதற்கு பெண் பார்த்து வந்தேன். அதற்குள் எங்களை விட்டு போய் விட்டானே என்று கதறி அழுதார்.முத்துக்குமாரின் சொந்த கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.அங்கு முத்துக்குமாரின் படத்திற்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு ஊர்களிலும் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.இன்று மாலை முத்துக்குமாரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
தலைவர்கள் அஞ்சலிமுத்துக்குமார் மரணச் செய்தி கேட்டதும் விரைந்து சென்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழ் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இலங்கை எம்.பி.சிவாஜி லிங்கம், நடிகர் டி.ராஜேந்தர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட ஏராளமானவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.தே.மு.தி.க. சார்பில் இளைஞரணித் தலைவர் சுதீஷ் அஞ்சலி செலுத்தினார்முத்துக்குமார் உடலுக்கு அனைத்துத் தரப்பினரும் அஞ்சலி செலுத்துவதற்காக வசதியாக கொளத்தூர் வியாபாரிகள் சங்க கட்டிடம் முன்பு பெரிய மேடை அமைக்கப்பட்டது.நேற்றிரவு அந்த மேடைக்கு முத்துக்குமார் ஊர்வலமாக உடல் எடுத்து வரப்பட்டு குளிர் சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.இன்று காலை முதல் பெரும் திரளானவர்கள் முத்துக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து முத்துக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
செங்கல்பட்டில் 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கவனத்தை ஈர்த்த மாணவர்களும், கொளத்தூர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்தியவர்களில் 90 சதவீதம் பேர் இளைஞர்கள்தான்.

0 comments: