ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ மக்கள் சார்பிலும், எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு.
அன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழீழ மக்களுக்கான ஏழு கோடி தமிழக உடன்பிறப்புக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி நிற்கின்றன. உங்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு உலகத் தமிழினத்தின் வரலாற்றில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.
எமது மக்கள் சிங்கள அரசின் கொடுமையான இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்து நிற்கும் இவ்வேளையில் உங்களின் எழுச்சி கண்டு மன ஆறுதலும் உற்சாகமும் அடைகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, January 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment