Sunday, February 1, 2009

‘எங்கட அம்மாவோட அப்பாவோட ,தலைமுறையின்ட ஆசை, இனத் தின்ட ஆசை எங்கட ஆசை நிறைவேறும்

எங்கட அம்மாவோட ஆசை, எங்கட அப்பாவோட ஆசை, எங்கட தலைமுறையின்ட ஆசை, எங்கட இனத் தின்ட ஆசை, விடியப்போகின்ற விடியலின்ட வெளிச்சத்தில எங்கட ஆசை நிறைவேறும், தமிழீழம் நிச்சயம் உதயமாகும்!’
- கிளைடர் குண்டுத் தாக்குதலின் கோரத்தில் உடம்பெங்கும் ரத்த சகதியாக ரணகளப்பட்டிருந்த நிலையிலும், வலி மறந்து முணுமுணுக்கிறான் அந்தச் சிறுவன்.
பிப்ரவரி 4-க்குள் முல்லைத் தீவு முழுவதையும் பிடித்தே தீருவோம் என்கிற வெறியில் வேகமெடுக்கும் இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையாவதென்னவோ அப்பாவித் தமிழ் மக்கள்தான்!
பிளேடால் பிரசவம்…
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்கள்தான்
வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவை. வட பகுதியின் நாலரை லட்சம் தமிழர்களும் இந்த நான்கு மாவட்டங்களில்தான் வசித்துவந்தனர்.
இதில் ஒவ்வொரு பகுதியாக ராணுவம் கைப்பற்றக் கைப் பற்ற… மக்களும் புலிகளுடன் நகர்ந்து இறுதியாகத்தான் முல்லைத்தீவு என்ற குறுகிய பகுதிக்குள் அடைபட்டிருக்கின்றனர்.
அதிலும் புதுக்குடியிருப்பு, விசுவமடு, தர்மபுரம், ருத்ரபுரம், உடையார்கட்டு போன்ற சில கிராமங்களுக்குள்தான் இந்த நாலரை லட்சம் தமிழர்களும் சொந்த நாட்டுக்குள்ளேயே நாடு கடத்தப்பட்ட அகதிகளாக அலைந்துகொண்டு இருக்கின்றனர்.
இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதம கொறடாவும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனிடம் பேசினோம்.
”புலிகளைக் குறிவெச்சு எங்க மக்கள் மேல குண்டுகளைப் போடுது ராணுவம். முகமாலை பகுதியைச் சேர்ந்த ஒரு நிறை மாத கர்ப்பிணிப் பெண், தன் குடும்பத்தோட இப்படிக் காட்டில் ஒதுங்கியிருந்திருக்கு. காட்டுக்குள் அந்தப் பெண்ணுக்கு திடீர்னு பிரசவ வலி வரவும், என்ன செய்யறதுன்னு திகைச்சுப் போயிருக்காங்க. அந்த நேரம் பார்த்து ராணுவம் விமானத்திலிருந்து குண்டு போட்டுக்கிட்டிருக்கவும், அவங்களால வைத்தியசாலைக்கும் வர முடியலை.
வேதனையில் துடிச்ச அந்தப் பெண் கொஞ்ச நேரத்தில் இறந்துபோயிருக்கு. உடனே, அவங்க வீட்டுல உள்ளவங்க என்ன செய்யறதுன்னு தெரியாமல் பிளேடை வச்சு வயித்தைக் கிழிச்சு குழந்தையை வெளியே எடுத்திருக்காங்க.
அதேமாதிரி தேவிபுரத்துல கூட்டுக்குடும்பமா வாழ்ந்த ஒரு குடும்பத்துல இருந்த பெரியவர்கள், குழந்தைகள்னு 22 பேர் ஒரே நாள்ல ஷெல் வீச்சுல இறந்துட்டாங்க.
நான்கு குழந்தைகள் உள்ள ஒரு குடும்பம் பயத்துல காட்டுக் குள்ள ஒதுங்கியிருந்திருக்காங்க. அங்க குடிக்கத் தண்ணி கிடைக்காமல் காடு முழுவதும் அலைஞ்சிருக்காங்க.
தாகம் தாங்க முடியாமல் ஒரு குட்டையில தேங்கியிருந்த அழுக்குத் தண்ணியைக் குடிச்சிருக்காங்க.
இதுல கடுமையான வயித்துப்போக்கு ஏற்பட்டு, அந்த நாலு குழந்தைகளும் இறந்துபோயிருக்கு. இதையெல்லாம் ஐ.நா. கண்டிச்ச பிறகுதான், சில பகுதிகளுக்கு பாதுகாப்பு மையங்களை ராணுவம் அறிவிச்சுச்சு.
இதெல்லாம் உலகத்தோட கண்ணுக்குத் தெரியலியா?” - ஆவேசமாகக் கேட்டு நிறுத்தினார்.
வாய் பொத்தி, கைகால் கட்டி…
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோக ராஜலிங்கத்திடம் பேசினோம். ”போர்ச் சூழலின் உக்கிரம் ஒரு பக்கம், எங்க மக்கள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் செத்து மடியற பயங்கரம் இன்னொரு பக்கம்.
தினம் தினம் குறைஞ்சது ஆயிரம் பேராவது போரில் அடிபடுறாங்க. அப்படி வர்ற மக்களுக்கு எந்த மருத்துவ உதவியையுமே இங்கே உள்ள மருத்துவ மையங்களில் செய்ய முடியலை.
வலியில் துடிக்கும் மக்களுக்கு முதலில் ‘கேட்டமின்’ மாதிரியான வலி நிவாரணி, மயக்க மருந்துகளைக் கொடுத்துட்டுத்தான் மருத்துவம் பார்க்கணும். ஆனா, அந்த மருந்துகள் சுத்தமா இல்லை. அதனால அடிபட்டு வர்றவங்க கதறல் வெளியே வராம வாயை அழுத்திப் பொத்தி, அவங்க கைகால்களையும் அமுக்கிப் பிடிச்சு, அந்த ரண வலியோடவே மருத்துவம் பார்க்கறாங்க.
திட்டமிட்டு மருந்துப் பொருட்களை அனுப்பாமல், எங்க இனமே அழியட்டும்னு இலங்கை அரசு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கு.
குறிப்பா இனவிருத்தி வயதுடைய தமிழ் இளைஞர்களைக் குறிவெச்சு ராணுவம் சுட்டுக் கொல்லுது. இந்த விஷயங்கள் எல்லாம் உலக சமுதாயத்தின் பார்வைக்குப் போகலை. அப்படி போனால்தான் இலங்கை அரசின் நிஜமான கோரமுகம் எல்லோருக்கும் தெரியும்!” என்றார்.
ராணுவ வசமான முல்லைத்தீவு!
சமீபத்தில் நடந்த கல்மாடுக்குளம் அணைக்கட்டுத் தாக்குதல் சம்பவத்தை திசைதிருப்பும் விதமாகத்தான் சிங்கள ராணுவம் முல்லைத்தீவு பிடிக்கப்பட்டதாகப் பொய்ச் செய்தி பரப்புகிறது என ஈழ ஆர்வலர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஈழத்தின் போர் நிலைமைகளை அறிந்த சிலரோ, ”முல்லைத்தீவு ராணுவத்தின் வசமாகிவிட்டது உண்மைதான்.
ஆனால், ஒரு வாரத்துக்கு முன்னரே ராணுவம் முல்லைத்தீவின் முகப்புப் பகுதியைப் பிடித்துவிட்டது. பிப்ரவரி 4-ம் தேதி இலங்கையின் குடியரசு தினம்.
அன்றைய தினத்தில் முல்லைத்தீவின் வெற்றிக் கொண்டாட்டத்தை அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தது ராணுவம். புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே பகுதியான முல்லைத்தீவையும் கைவசமாக்கிவிட்டதாக அறிவித்தால், சிங்கள மக்களை சந்தோஷப்படுத்த முடியும் என்று நினைத்தது ராணுவம்.
குடியரசு தினத்தன்றுதான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவிருக்கிறது. முல்லைத்தீவு வெற்றி மூலம் மக்களின் அபரிதமான ஆதரவோடு தேர்தலை எதிர்கொள்ள நினைக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. ஆனால், இந்த சூட்சுமத் திட்டங்களை எல்லாம் புலிகளின் அணைக்கட்டு அட்டாக் தவிடுபொடி ஆக்கிவிட்டது.
இதை ராணுவம் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை.
ஆனாலும், மொத்த மாகாணங்களின் மாவட்ட நிர்வகிப்புப் பகுதிகளை ராணுவம் கையகப்படுத்தியது இதுவரை நடக்காதது.
முல்லைத்தீவின் முக்கியப் பகுதியைப் பிடித்ததன் மூலம் முப்பதாண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை நிகழ்த்தி விட்டது ராணுவம்.
இதற்கு பதிலடியாக இன்னும் ஏதாவது தடாலடியான தாக்குதலைப் புலிகள் கையிலெடுப்பார்கள்…” என்கிறார்கள்.
இன்னும் இரு அணைகள்…
முல்லைத் தீவை பிடித்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்த பிறகு, போர் நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இலங்கையில் இருக்கும் நடுநிலையான பத்திரிகையாளர்கள் சிலரிடம் கேட்டோம்.
”அடுத்த கட்டமாக யாருமே நினைத்துப் பார்க்க முடியாத தாக்குதலை நடத்தி, பெரிய அளவிலான நிலைகுலைவை உண்டாக்கு வதுதான் புலிகளின் போர்த் திட்டம். கல்மாடு அணைக்கட்டை உடைத்ததன் மூலம், சிறு ஆயுதங்களைக்கூடப்பயன்படுத்தாமல் மிகப்பெரிய சேதத்தை ராணுவத்துக்கு ஏற்படுத்தி இருக்கிறார்கள் புலிகள்.
கல்மாடுகுளத்தைவிட பெரிய இரு அணைகள் முழுக்க நீர் நிரம்பி இருக்கின்றன. ரிஷிமாடக்குளம் மற்றும் உடையார்கட்டுக்குளம் இரண்டையும் அடுத்தகட்டத் தாக்குதலுக்காகப் புலிகள் பயன்படுத்துவார்கள் என்று ராணுவத் தரப்பு உஷாராகிவிட்டது.
ஆள் சேதத்தை உண்டாக்கா விட்டாலும், ராணுவத்தை ஆறுமாத காலத்துக்கு முன்னேறவிடாமல் தடுப்பதற்காக மேற் கொண்டு அணை உடைப்புகளைப் புலிகள் நடத்தக்கூடும் என்பது ராணுவத்தின் யூகம். ஆனால், அந்த அணைக்கட்டுகளை உடைக்கும் திட்டம் புலிகளுக்குக் கிடையாது. அதற்கு மாறாக இனி சாதுர்ய தாக்குதலில் புலிகள் தீவிரமாவார்கள்.
கிளிநொச்சியை மீட்கும் திட்டத்தில் காடுகளுக்குள்ளும் பதுங்கு குழிகளுக்குள்ளும் தங்கியிருக்கும் புலிகள் படை, சாதுர்யமான தாக்குதலை நடத்தும். பெரிய பெரிய மரங்களின் நடுப்பகுதியைக் குடைந்து அதன் உள்ளே தற்கொலைப் படை வீரர்கள் தங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
ராணுவப் படைகள் குவிந்திருக்கிற இடங்களில் மரங்களிலிருந்து குண்டோடு குதித்துப் பேரழிவை அவர்கள் உண்டாக்கக்கூடும். இரவு நேரங்களில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி ராணுவத்துக்கு நெருக்கடி கொடுக்கிற போர்முறைகளும் இப்போது பின்பற்றப்பட்டு வருகின்றன…” என்று சொல்கிறார்கள் சிலர்.
தற்கொலைப்படைகள் தயார்!
”கொழும்பில் வாழும் தமிழர்களுக்குள் புலிகளின் தற்கொலைப் படையினரும் கலந்திருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பே அவர்களுக்குத் தக்க பயிற்சி கொடுக்கப்பட்டு ‘சூழ்நிலைக்குத்தக்கபடி முடிவெடுங்கள்’ என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதன்பிறகு, அவர்களுக்கும் புலிகளுக்கும் எவ்விதமான தொடர்பும் இருக்காது. அவர்கள் எப்போது என்னவிதமான தாக்குதல்கள் நடத்துவார்கள் என்று புலிகளின் தலைமைக்கும் தெரியாது. முன்னாள் அதிபர் பிரேமதாசாவைக் கொலை செய்த பாபு என்பவர், ஆறு வருடங்களாக பிரேமதாசாவின் அபிமானத்தைப் பெற்றிருந் தவர்.
புலிகளுக்கு எதிரான இக்கட்டுகளை பிரேமதாசா ஏற்படுத்தியபோது, மனித வெடிகுண்டாக மாறினார் பாபு. அதேபோல் இப்போது கொழும்பில் வாழ்ந்தபடி உரிய ‘தருணத்துக்காக’க் காத்திருக்கும் தற்கொலைப் படையினர், எந்நேரத்திலும் சிங்கள அரசின் முக்கியப் புள்ளிகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே, ஃபொன்சேகா, கருணா உள்ளிட்டவர்கள் மும்மடங்கு பாதுகாப்பில் வலம்வருகிறார்கள்.
வருகிற 4-ம்தேதி இலங்கை குடியரசு தினத்தை பெரும் கொண்டாட் டமாக நடத்துகிற மூடில் இருப்பது தெரிந்து, அதற்கு முந்தைய தினத்திலேயே பல்முனை தாக்குதல்களை நடத்தி, அவர்களை விதிர்விதிர்க்க வைக்கும் திட்டத்திலும் இருக்கிறார்கள் புலிகள்!” என்கிறார்கள் கொழும்புவாழ் தமிழர்கள்.
கலங்கடிக்கும் கவுன்டர் இன்டலிஜென்ட்!
புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான சமீபத் திய போர் நிலவரங்களைச் சொல்லும் விவரமறிந்த சிலர், ”கோத்தபய ராஜபக்ஷே மீதும், டக்ளஸ் தேவானந்தா மீதும் புலிகள் தாக்குதல் நடத்தியதாக சமீபத்தில் செய்திகள் பரவின.
ஆனால், அத்தகைய செய்திகளைப் பரப்பிவிட்டதே ராணுவத்தின் கவுன்டர் இன்டலிஜென்ட் ஆட்கள்தான்.
இதன்மூலம் சிங்கள மக்கள் தரப்பின் பேரபிமானத்தைப் பெறுவதும், ‘புலிகள் பொய்யான கருத்துகளைப் பரப்பிவிடுகிறார்கள்’ என்கிற தவறான தோற்றத்தை ஏற்படுத்துவதும்தான் இதன் நோக்கம்.
பிரபாகரன் தப்பி ஓடிவிட்டதாக வதந்திகளைக் கிளப்புவதன் மூலம், அவருடைய மூவ்களை அறிய முடியும் என நினைத்தது இலங்கை உளவுத்துறை.
அதற்குத் தக்க பலன் இல்லாதபட்சத்தில் கவுன்டர் இன்டலிஜென்ட் மூலமாக, இல்லாத கலங்கடிப்புகளை ராணுவத் தரப்பு செய்துகொண்டிருக்கிறது.
எங்களுக்குத் தெரிந்த மட்டில், பிரபாகரன் இப்போது போர்க் களங்களிலேயே தென்படுவதாகச் சொல்கிறார்கள்.
புலிகளின் மருத்துவக் குழு கொடுக்கிற போர் நிலவரங்களை வைத்து ‘முன்னேறுவதா, பின்னகர்வதா’ என்பதை பிரபாகரனே வகுத்துக் கொடுக்கிறார்…” என்கிறார்கள்.
தறிகெட்ட வதந்திகள்…
இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்து கொண்டிருக்கும் மோதலை மையமாக வைத்துத் தமிழகத்தில் பல்வேறு விதமான செய்திகள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாகப் பரப்பப்படும் பல்வேறு தகவல்களில் சிலருடைய விருப்பு-வெறுப்புகளும் இடம்பெற ஆரம்பித் திருக்கின்றன.
‘முல்லைத் தீவில் நடந்த கடுமையான மோதலில் பிரபாகரன் இறந்துவிட்டார்…’ என்று ஒருதரப்பு தகவல் பரப்பிக் கொண்டிருக்கும்போதே எதிர் தரப்பிலிருந்து, ‘டக்ளஸ் தேவானந்தா, கோத்தபய ராஜபக்ஷே, மகிந்தா ராஜபக்ஷே ஆகியோரை கொழும்புவில் வைத்து விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினர் கொன்றுவிட்டார்கள்’ என்று தகவல் பரப்புகிறார்கள்.
‘இலங்கையிலிருந்து வரும் செய்திகளில் எதை நம்புவது, எதைப் புறக்கணிப்பது என்று புரியாமல் தமிழக மீடியாக்கள் குழம்பித் தவிக்க வேண்டும் என்ற தற்காலிக தந்திர ஆயுதமாகவே இப்படி உண்மைகளும் வதந்திகளும் கலந்து கலந்து வெளியிடப்படுகின்றன’ என்கிறார்கள் விவரமானவர்கள்.
இது புரியாமல், ஒவ்வொரு எஸ்.எம்.எஸ். செய்திக்கும் தமிழகத்தில் சிலர் வெடிவெடித்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டதும் நடந்தது.
இத்தனைக்கும் நடுவே, ‘ஃபிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய யூனியனில் புலிகள் இயக்கம் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கங்கள் மீதிருந்த தடை நீக்கப்படுகிறது’ என உறுதிபடுத்தப்படாத தகவல்களும் பரபரவென பரவிக்கிடக்கிறது

0 comments: