Saturday, January 31, 2009

ஐ.நா.வின் அறிவிப்பினையடுத்து இளையோரின் உண்ணாநிலை போராட்டம் இடைநிறுத்தம்

சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக சுவிஸ் தமிழ் இளையோர் கடந்த புதன்கிழமை (28.01.09) தொடங்கிய உண்ணாநிலை போராட்டம் ஐ.நா. அலுவலகத்தினரின் சாதகமான அறிவிப்பினைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உடனடியாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும்
வன்னியில் உள்ள தமிழ் மக்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் அவர்கள் நேரடியாக உண்ணாநிலை போராட்டம் நடத்தும் தம்மைச் சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து நடத்தப்பட்டது.
ஆயிரத்துக்கும் அதிகமான சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஐ.நா. முன்பு அணிதிரண்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.
நேற்று முன்நாள் வியாழக்கிழமை மாலை தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவினை ஐ.நா. மன்றத்திடம் கையளித்த இளையோர் ஐ.நா. சபை முடிவுக்காக ஆயிரக்கணக்கான மக்களுடன் நேற்று மாலை காத்திருந்தனர்.
இளையோரின் வேண்டுகோளுக்கான சாதகமான பதிலை எதிர்வரும் வியாழக்கிழமை (05.02.09) தாம் அளிப்பதாகவும், அதன் அடிப்படையில் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்துமாறும் மாலை 7:30 நிமிடமளவில் ஐ.நா. அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர்.
மாலை 8:00 மணியளவில் உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்திய இளையோர் வியாழக்கிழமை தமக்குச் சாதகமான பதில் வராத பட்சத்தில் நீராகாரம் இன்றித் தாம் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக கூடி நின்ற மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ளும் இளையோருக்கு ஆதரவு அளிக்க ஐ.நா. சபையை நோக்கி அணிதிரண்ட சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் துண்டுப்பிரசுரங்களை சுவிஸ் மக்களுக்கு விநியோகித்தனர்.
அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்களில் ஜெனீவா ஐ.நா. முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் அதேவேளை, சிறிலங்கா அரசின் தேசிய நாளான பெப்ரவரி 4 இல் ஐ.நா. சபை முன்றலில் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.
இந்த ஒன்றுகூடலில் அனைத்து தமிழ் மக்களையும் இந்நாள் தமிழர்களின் கரிநாள் என்று உலகுக்குப் பறைசாற்ற அணிதிரளுமாறும் சுவிஸ் தமிழ் இளையோர் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன், எதிர்வரும் வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் அதேவேளை, ஐ.நா. சபையினால் சாதகமான பதில் வராத பட்சத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தண்ணீர் அருந்தாது போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக இளையோர் தெரிவித்துள்ளனர்.
முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மூலம் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்ட அனைவரையும் அணிதிரளுமாறு இளையோர் வேண்டுகோள் விடுத்தனர்.

0 comments: