வன்னியில் மிகச்சிறிய பிரதேசமொன்றுக்குள் கடும் மோதல்களுக்குள் சிக்கியுள்ள பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும், இந்தியாவும் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதைடுத்து இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஐ.நா. வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கை நிலவரம் தொடர்பாக நேற்றையதினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா'க்குத் தகவல் தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், மோதல்களுக்குள் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
"மிகவும் சிறிய அதேநேரம் அதிகளவு செறிவான பொதுமக்கள் நிறைந்துள்ள பகுதிக்குள் நடைபெற்றுவரும் மோதல்கள் காரணமாக ஏற்படக்கூடிய மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகம் உடனடியாகச் செயற்படவேண்டும். மோசமான மனிதப் பேரவலத்தைத் தவிர்ப்பதற்கு மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். எந்தவித தாமதமும் இன்றி உடனடியாகச் செயற்படுமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களை ஐ.நா.வும், ஏனைய தரப்புக்களும் வேண்டுகோள் விடுக்கின்றன" என்றார் பான் கீ மூன்.
முரண்பாட்டுக்கான தீர்வு அதற்கான மூல காரணத்துக்கும், சட்டபூர்வமான அபிலாசகைளுக்கும் முகம்கொடுக்கும் அரசியல் அடிப்படையிலேயே காணப்பட முடியும் என்று தான் நம்புவதாகவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிலவரம் தொடர்பாக பிரணாப் முகர்ஜியுடன் விரிவாகக் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்ட பான் கீ மூன், இந்த விடயத்தில் ஐ.நா. வின் நிலைப்பாடு இந்திய நிலைப்பாட்டை ஒத்ததாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு இந்தியாவும், ஐ.நா.வும் கூட்டாகப் பணியாற்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மோதல்களுக்குள் சிக்கியுள்ள பொதுமக்களைக் காப்பாற்ற உடனடியாகப் போர்நிறுத்தம் ஒன்று செய்துகொள்ளப்படவேண்டும் என்று பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், தென்னாபிரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு அரசியல் ரீதியாகப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சிக்கவேண்டும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகளின் கூட்டமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலைப்பாட்டைத் தாமும் ஏற்றுக்கொள்வதாக நோர்வே அமைச்சரும், இலங்கை சமாதான முயற்சிகளில் முன்னின்று உழைத்தவருமான எரிக் சொல்ஹேய்மும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Saturday, February 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment