Saturday, January 31, 2009

நாகேஷ் காலமானார்

அடுத்தடுத்த தலைமுறைகளும் போற்றக் கூடிய நகைச்சுவை பல்கலைக்கழகமாக விளங்கிய நகைச்சுவை பேரரசர் நாகேஷ் காலமாகிவிட்டார். அவருக்கு வயது 75. ராஜேஷ் பாபு, ரமேஷ் பாபு, ஆனந்த பாபு ஆகிய மூன்று மகன்களும் 3 பேரன்கள், 2 பேத்திகளும் உள்ளனர். ஒல்லியான நாகேஷின் இயற்பெயர் 'குண்டு'ராவ்!
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கீழே விழுந்ததில் காலில் பலத்த அடிபட்டிருந்ததாம் நாகேஷ§க்கு. அன்றிலிருந்து வீட்டிலேயே இருந்தவர், நேற்று குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினாராம். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் காலமானார்.
ஆரம்ப காலங்களில் பாலசந்தர் நாடகங்களில் நடிக்கத் துவங்கியவர், பின்பு நவகிரகம் படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார். சர்வர் சுந்தரம் (1964) படத்தில் நடித்து புகழ் ஏணியில் ஏற ஆரம்பித்தார். இவர் நடித்த கடைசி படம் தசாவதாரம். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், நாகேஷின் திருவிளையாடல் தருமி வேடம் மக்களால் மறக்கவே முடியாதது.
நாகேஷின் மறைவை அறிந்த ரஜினி, கமல் இருவரும் அவரது வீட்டிற்கு உடனே விரைந்தனர். பத்மஸ்ரீ விருது பெற்ற விவேக் நாகேஷ் பற்றி கூறும்போது நா தழுதழுக்க பேசினார். 'சிலரால் சில மாதிரிதான் காமெடியாக நடிக்க முடியும். ஆனால் அவர் ஆல் ரவுண்டர். பத்ம ஸ்ரீ விருதுக்காக சந்தோஷப்படுவதா? நாகேஷ் மறைந்தார் என்பதை நினைத்து அழுவதா? தவிக்கிறேன்' என்றார் விவேக்.
தமிழ் சினிமாவின் இழப்பு காலம் இது. சிறிது நாட்களுக்கு முன்புதான் நம்பியாரை இழந்தோம். இப்போது நாகேஷ். இளைஞர்களின் புத்துணர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்த நாகேஷை இழந்து கண்ணீர் வடிக்கிறோம் என்றார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார்.

0 comments: